Pages

Thursday, February 6, 2014

ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு எதிராக மேற்கொண்ட செயற்பாடுகள் சட்டத்திற்கு முரணானவை: வெளிநாட்டு கொள்கை சஞ்சிகை ஆசிரியர் கருத்து!

Thursday, February 06, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு எதிராக மேற்கொண்ட செயற்பாடுகள் சட்டத்திற்கு முரணானவை என்றும் அதனால் இலங்கை அது குறித்து சர்வதேச நீதிமன்றத்திற்கு மனு செய்ய வேண்டுமென்று வெளிநாட்டு கொள்கை சஞ்சிகை என்ற சர்வதேச சஞ்சிகையொன்று செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
 
இலங்கை பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு தயாரித்துள்ள அறிக்கை சட்டத்திற்கு அமைய தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்பதை இந்த சர்வதேச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கேட்டறிய வேண்டுமென்றும் இந்த சஞ்சிகை எழுதியுள்ளது. இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகள் தொடர்பாகவே இந்த சஞ்சிகை கருத்தை வெளியிட்டுள்ளது.
இந்த சஞ்சிகையின் ஆசிரியரான தர்ஷன் வீரசேகர, இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரே வழியாக இருப்பது இலங்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயக நிபுணர் குழுவின் பிரேரணைகள் சட்டபூர்வமானதா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்குமாறு கேட்க வேண்டும். இதைவிட வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அமெரிக்காவின் ஆதரவிலான இலங்கைக்கு எதிரான இரு தீர்மானங்கள் 2012இலும் 2013இலும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை சட்டபூர்வமானவை அல்ல என்பதனால் அவற்றை சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல என்றும் சஞ்சிகை ஆசிரியர் மேலும் சுட்டிக்காட்டினார்.
 
சஞ்சிகை ஆசிரியரான தர்ஷன் வீரசேகர ஒரு சட்டத்தரணியுமாவார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பூர்வாங்க அறிக்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஒழிவு மறைவற்ற தன்மை இருக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே விசாரணைகள் நடத்தப்பட்டன என்றும், ஆயினும் 2013 செப்டெம்பருக்கு பின்னர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளையும் அடிப்படையாக வைத்து இங்கிலாந்தின் சனல் 4 தொலைக்காட்சி விவரணப் படங்களையும் அடிப்படையாக வைத்து இலங்கை மீது போர்குற்றச்சாட்டுகளை சுமத்துவது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு கடைப்பிடிக்கும் செயற்திறன் மூலம் இலங்கை மீது கண்டனக் குரல் எழுப்பி, இந்த போர்க்குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நிரூபிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டிருப்பது தவறு என்றும் சஞ்சிகை ஆசிரியர் கூறுகிறார். இதனால், இலங்கை தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு தான் தவறிழைக்கவில்லை என்பதை ஆதாரபூர்வமாக வாதாடவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கு போதியளவு ஆதாரங்கள் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு பதில், அக்குற்றச்சாட்டுகளை நடைமுறைப் படுத்துவதற்கு எத்தணிப்பது தவறு என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment