Saturday, January 4, 2014

கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது அதிகாரிகள் பின்தொடரவோ,கண்காணிக்கவோ முற்றுகையிடவோ இல்லை: சூலானந்த பெரேரா!

Saturday, January 4, 2014
இலங்கை::கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது அதிகாரிகள் பின்தொடரவோ,கண்காணிக்கவோ முற்றுகையிடவோ இல்லை. முல்லைதீவில் வைத்து அவரை சந்தித்து தெளிவுபடுத்தல் ஒன்றினை மட்டுமே வழங்கினோம் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

கனேடிய எம்.பி.யான ராதிகாவை யாழ், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களிலும் கொழும்பிலும் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் குழு பின் தொடர்ந்ததன் நோக்கம் என்ன என அத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரை செய்தி நிறுவனம் ஒன்று தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனை நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின் தொடரவில்லை. அவ்வாறு கூறப்படுவதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். உண்மையில் எங்கள் குழுவினர் ராதிகாவை சந்தித்தனர். முல்லைத்தீவில் வைத்து நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த கனேடிய பாராளுமன்ற உறுப்பினரை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாகவும் வடக்கில் பல்வேறு நடவடிக்கைகளிலும் சந்திப்புக்களிலும் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கடந்த நாட்களில் செய்தி வெளியானது.

இது தொடர்பிலேயே நாம் அவரை சந்தித்தோம். முல்லைத்தீவில் அவர் இருக்கும் இடம் தொடர்பில் விசாரித்து அறிந்து அங்கு சென்று சந்தித்த நாம், ஊடகங்களில் வெளியான இவ்வாறான செய்திகள் குறித்து வினவினோம்.
அத்துடன் வடக்கில் சில அரசியல் தலைமைகளை அவர் சந்தித்ததாக கூறப்படுவது தொடர்பிலும் நாம் கேட்டோம்.

அப்போது அவர்கள் தனது உறவினர்கள் என ராதிகா பதிலளித்தார். அதனை நாம் எதிர்க்கவில்லை. உறவினர்களை சந்திக்க நாம் தடை விதிக்கவில்லை.
சுற்றுலா விசாவில் வந்து அரசியல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் நாம் அவரை தெளிவுபடுத்தினோம்.

இது தான் நடந்தது. இதனை விட எதுவும் இங்கு நடைபெறவில்லை. நாம் அவரை ஒருபோதும் பின் தொடரவும் இல்லை. இதனை அவர் ஏற்றுக்கொண்ட நிலையிலேயே கொழும்புக்கு திரும்பியுள்ளார். என  தெரிவித்தார் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா.

No comments:

Post a Comment