Tuesday, January 14, 2014

வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடரட்டும்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொங்கல் திருநாள் வாழ்த்து!

Tuesday, January 14, 2014
இலங்கை::பொங்கலானது சூரிய பகவானின் ஆசீர்வாதத்துடன் வாழ்க்கையில் புதிய சந்தர்ப்பங்களுக்கான ஆரம்பமாகத் திகழ்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது தைப்பொங்கல் பண்டிகைக்கான வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
பொங்கல் பண்டிகை மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையேயான பலமான பிணைப்பை ஏற்படுத்துவதுடன் இது நாட்டின் சமாதானத்திற்காகவும் நல்லிணத்திற்காகவும் நன்றி செலுத்தும் சந்தர்ப்பமாகுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
 
இன்று தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தை மாதத்தின் முதல் நாளைக் குறித்து நிற்கும் இவ்விசேட பண்டிகையான தைப்பொங்கல் சிறந்த அறுவடையைத் தந்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும்வகையில் அந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு விசேட பண்டிகையாகும்.
 
இப்பண்டிகையின் விசேட அம்சமான பாலும் சோறும் பொங்க வைப்பதைக் குறித்து நிற்கும் பொங்கலானது சூரிய பகவானின் ஆசிர்வாதத்துடன் வாழ்க்கையில் புதிய சந்தர்ப்பங்களுக்கான ஆரம்பமாகக் கருதப்படுவதுடன், அறுவடையின் முதற்பகுதி சூரிய பகவானுக்கு படையல் செய்யப்படும் போது இது சூரிய மாங்கல்யமாகவும் குறிப்பிடப்படுகிறது.
 
இப்பண்டிகை சிறந்த அறுவடைக்காக சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதிலும் எதிர்வரும் வருடத்திலும் சிறந்த அறுவடையும் வெற்றிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலும் மிகுந்த அன்பு மற்றும் புரிந்துணர்வுடன் குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்றிணைக்கின்றது.
 
இப்பண்டிகையின் இரண்டாவது நாள் நிலத்தை உழுதல், பயணம் செய்தல் மற்றும் பால், உரம் போன்றவற்றுக்காகப் பயன்படும் தமது கால்நடைகளுக்கு கெளரவம் அளிக்கும் ஒரு விசேட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
 
தைப்பொங்கல் பண்டிகை மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையே யான பலமான பிணைப்பை ஏற்படுத்துவதுடன் நாளாந்த வாழ்விலும் தெய்வ வழிபாட்டிலும் மக்களினதும் சமூகங்களினதும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது. இது எமது நாட்டில் சமாதானத்திற்காகவும் மக்கள் மத்தியிலான நல்லிணக்கத்திற்காகவும் நன்றி செலுத்தும் சந்தர்ப்பமாகும்.
 
இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
 

No comments:

Post a Comment