Pages

Wednesday, January 15, 2014

கோடியக்கரை மீனவர்கள் விரட்டியடிப்பு!

Wednesday, January 15, 2014
வேதாரண்யம்::தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சிறை பிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ராமேஸ்வரம், நாகை, வேதாரண்யம், புதுக்கோட்டை பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என முதல் – அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு பல முறை கடிதம் எழுதி உள்ளார். ஆனாலும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த நாகை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 52 பேரை விடுதலை செய்ய முதல் –அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.

அவரது நடவடிக்கை காரணமாக இலங்கை திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 52 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான படகில் சண்முகம், ரவி, காளிதாஸ், தங்கராசு, சம்பத் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.

அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான படகில் வீரமணி, வெற்றிவேல், ஜோதி, முருகவேல் ஆகியோர் சென்றனர்.
அவர்கள் 9 பேரும் நேற்று மதியம் கோடியக்கரைக்கு தென் கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

நேற்று இரவு 10 மணியளவில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகு அங்கு வந்தது.

அதில் ஸ்ரீலங்கா கோஸ்ட் கார்டு என எழுதப்பட்டு இருந்தது. அதில் இருந்த இலங்கை கடற்படையினர் கோடியக்கரை மீனவர்கள் மீது சரமாரி கற்களை வீசினார்கள்.

பின்னர் மீனவர்கள் விரித்திருந்த வலைகளை வெட்டி வீசினார்கள். கல் வீசியதில் மீனவர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. தொடர்ந்து கல்வீசியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தாங்கள் சென்ற படகுகளில் கரைக்கு திரும்பினார்கள்.

இன்று அதிகாலை 5 மணியளவில் அவர்கள் கரைக்கு வந்து சேர்ந்தனர். இலங்கை கடற்படையினர் அவர்களை கரைக்கு திரும்பும் வரை அங்கேயே நின்றதால் மீனவர்கள் தங்களது வலைகளை எடுக்க முடியாமல் திரும்பினார்கள்.

இது குறித்து கரைக்கு திரும்பிய மீனவர்கள் கடலோர காவல் படைக்கும், மீன்வளத்துறை அதிகாரிக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை சமயத்தில் கோடியக்கரை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கல் வீசி விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் மீனவ கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment