Thursday, January 16, 2014

எனது அரசாங்கம் குற்றம் இழைப்பவர்களை தராதரம் பார்க்காமல் தண்டிக்க என்றுமே தயங்கியதில்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Thursday, January 16, 2014  
இலங்கை::எனது அரசாங்கம் குற்றம் இழைப்பவர்களை தராதரம் பார்க்காமல் தண்டிக்க என்றுமே தயங்கியதில்லை. நாம் இவ்விதம் சமூகத்தில் உயர் பதவி வகிப்பவர்களைக் கூட அவர்கள் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்தி அவர் களுக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டிருந்தால், சட்ட பூர்வமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுத்து வருகிறோம்.

அரசாங்க சேவையில் உயர் பதவி வகிக்கும் பிரதி பொலிஸ்மா அதிபர்களின் அந்தஸ்தைக் கூட பொருட்படுத்தாமல் இவ்விதம் குற்றம் இழைத்தவர்களை விளக்கமறியலில் வைத்து அவர்க ளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்து இருக்கிறோம்.

இவ்விதம் நாட்டில் நல்லொழுக்கத்தை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் இந்நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து விட்டன என்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்களை எங்கள் மீது சுமத்துவது வேதனையை அளிக்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீதாவக்கைபுர, மானியங்கம ரஜமகாவிகாரையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது தெரிவித்தார்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒரு நாட்டில் சக்திவாய்ந்த எதிர்க்கட்சி ஒன்று இருப்பது அவசிய மாகும். ஒரு எதிர்க்கட்சி தனது நலனுக்காக பாரபட்சமான முறையில் நடந்து கொள்ளாமல், நீதி, நியாயத்துடன் ஜனநாயக பாரம்பரியங்களை சீர்குலைக்காத வகையில் நடந்து கொள்வது அவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், எங்கள் நாட்டில் உள்ள இன்றைய எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை செய்து அரசாங்கத்தின் நல்லாட்சிக்கு உறுதுணை புரிவதற்குப் பதில் அரசாங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி சேற்றை அள்ளி வீசுகிறது என்று கண்டனம் தெரிவித்தார்.

நம் நாட்டு மக்கள் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் தாய்நாட்டுப் பற்றுடன் செயற்படவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஜே.வி.பி போன்ற மக்கள் ஆதரவை முற்றாக இழந்துள்ள சில கட்சிகள் எங்கள் நாட்டின் எதிர்காலம் சீர்குலைந்தாலும் பரவாயில்லை, எத்தகைய ஆதாரமற்ற போலிக் குற்றச்சாட்டுக்களையாவது அரசாங்கத்தின் மீது சுமத்தி சர்வதேச சமூகத்தில் அரசாங்கத்துக்கு இருக்கும் நன்மதிப்புக்கு இழுக்கு ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்து கொள்வது உண்மையிலேயே நாட்டுப் பற்றுடைய எங்கள் நாட்டின் மக்களுக்கு மனவேதனை அளிப்பதாக அமைந்துள்ளது.

அரசாங்கத்தின் நற்பெயருக்கு தீங்கிழைக்கும் சதி வேலைகளில் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் டொலர் நோட்டுக்களை அபகரிக்கும் கழுகுகளைப் போன்று சிலர் இன்று செயற்படுகிறார்கள்.
வேறு சிலர் அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்களிடம் இருந்து மாதாந்தம் ஒரு பெரும் தொகையை சன்மானமாகப் பெறுவதற்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எங்கள் நாட்டுக்கு எதிரான போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் மாதம் நெருங்கும் போதும் இத்தகைய பேராசைக்கார குள்ளநரிகளுக்கு யோகம் அடித்து விடும். வெளிநாடுகளில் உள்ள அரச எதிர்ப்பு அமைப்புக்க ளின் செலவில் இந்த குள்ள நரிகள் ஜெனீவாவுக்குச் சென்று ஜெனீவா மனித உரிமை மகாநாட்டின் போது அங்குள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு வெளியில் குடித்து கும்மாளம் அடித்தவாறும் இலங்கைக்கு எதிரான சுலோக அட்டைகளை தாங்கியவாறும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மனித உரிமை மாநாட்டு கூட்டத்தொடருக்கு வரும்போது ஆர்ப்பாட்டங்களைச் செய்து அவர்களின் கவனத்தை ஈர்க்கும் தேசத் துரோக செயல்களிலும் ஈடுபடு வதுண்டு.

ரஜமஹாவிஹாரை சமய நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றும் போது, நம் நாட்டு மக்கள் சீதா வக்கை பிரதேசத்து மக்களின் தேசப்பற்றை மதித்து அவர்களை கெளரவிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார்.

போர்த்துக்கேய ஆட்சியாளர்களையே நம் நாட்டு மக்கள் அன்று பறங்கிய ஆட்சியாளர்கள் என்று கிண்டல் செய்வார்கள். அவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புப் படைகளை முன்னெடுத்துச் சென்று நாட்டின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு எடுத்த முயற்சிகளை சீதாவக்கை மன்னர்கள் அன்று உயிர்த்தியாகம் செய்து முறியடித்த வர லாற்று உண்மைகளை நாம் மறக்கலாகாது என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
தேசத்துக்கு துரோகம் இழைக்கும் எதிர்கட்சிகளுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் எதிர்த்து வாக்களித்து இக்கட்சிகளுக்கு நிச்சயம் மறக்க முடியாத பாடம் ஒன்றை புகட்டுவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment