Tuesday, January 21, 2014

காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டம் ஆரம்பம்!

Tuesday, January 21, 2014
இலங்கை::காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படவு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மீள் எழுச்சியைக் கருத்திற் கொண்டு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இந்த நலன்புரி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் கிளிநொச்சியி லுள்ள ஒத்துழைப்பு கேந்திரத்தில் நேற்று முழுநாள் நிவாரண நடவடிக்கை இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அமைச்சுக்களின் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் வாகிஸ்டர் உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மனிதாபிமான நடவடிக்கை காலக் கட்டத்தில் பயங்கரவாத செயற்பாடுகளால் காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகள் உள்ளடங்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 426 குடும்பங்களுக்கே நேற்று முதற்கட்டமாக நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சு சட்டமும் ஒழுங்கும் அமைச்சு, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, சிறுவ
ர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு, சமுர்த்தி அதிகார சபை, புனருத்தாபன அதிகார சபை, ஆட்பதிவு திணைக்களம், வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன இணைந்து இந்த நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அங்கவீனமுற்றவர்கள், வயோதிபர்கள், விதவைகளுக்கான விசேட கொடுப்பனவுகள், பாடசாலை மாணவர்களுக்கான கல்வி கற்றல் உபகரணங்கள், புத்தகங்கள், சுயதொழில் புரிபவர்களுக்கான உபகரணங்களும் தொழில் பயிற்சி வழிகாட்டல்களும், சமுர்த்தி நிவாரணம், மீள் கடன் போன்றன வழங்கப்பட்டன. இதேவேளை, குடும்பத்தில் மரணித்தவர்களுக்கான மரணச் சான்றிதழ்களும், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான அடையாள அட்டைகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இதேவேளை, நேற்று பிற்பகல் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரினால் உலர் உணவுப் பொதிகளும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து காணாமல் போனவர்கள் தொடர்பிலும் அவர்களது குடும்பத்திற்கான விசேட நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இதில் அமைச்சுக்களின் செயலாளர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment