Wednesday, January 15, 2014

தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை: இலங்கை அமைச்சர்

Wednesday, January 15, 2014
புது டெல்லி::டெல்லி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க, வியாழக்கிழமை முதல் நடவடிக்கை தொடங்கும் என்று இலங்கை அமைச்சர் ரஜிதா சேனரத்ன உறுதி அளித்தார்.
 
இலங்கை மற்றும் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக டெல்லியில் இன்று (புதன்கிழமை) இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
 
இதில், இந்தியா சார்பில் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரும், இலங்கை தரப்பில் ரஜிதா சேனரத்னவும் கலந்துகொண்டு பேச்சு நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், இரு தரப்பு மீனவர்களையும் உடனடியாக விடுவிப்பதுடன், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் திருப்பித் தந்துவிடுவது என்ற உடன்பாடு எட்டப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்ன, "
 
இரு நாடுகளையும் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க இருதரப்பிலும் ஒப்புக்கொண்டுள்ளோம். இதற்கான நடவடிக்கைகள் நாளை முதல் தொடங்கும்.
 
தமிழக மீனவர்களை விடுவிப்பதற்காக எனது அமைச்சகத்திற்கும், சட்டப் பிரிவுகளுக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளேன். நாளை முதலே மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிடும். அனைத்து மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர். அவர்களது படகுகளும் ஒப்படைக்கப்பட்டுவிடும்" என்றார்.
 
இலங்கைச் சிறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க தமிழக அரசு தரப்பிலும், தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகளும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
 
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கத்தில், இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையே வரும் 20-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது கவனிக்கத்தக்கது.
 
இதனிடையே, இலங்கை சிறையிலிருந்து 52 தமிழக மீனவர்களையும், தமிழகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 52 இலங்கை மீனவர்களும் கடந்த திங்கட்கிழமை பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டனர். இன்று சர்வதேச எல்லையில் இரு நாட்டு கடற்படையிடமும் பரஸ்பரம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
 
ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மீனவர்களை ஒப்படைப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment