Pages

Thursday, January 16, 2014

மீனவர் பிரச்சினை தொடர்பில் தற்போது முன்னெடுக்கும் பேச்சு தான்தோன்றித்தனமாது – தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்!

Thursday, January 16, 2014  
இலங்கை::இந்தியாவில் உள்ள தென்னிலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்றாலும் இன்று புது டெல்கியில் நடைபெறுகின்ற மாநாடு அவர்களை விடுதலை செய்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டதாக இருந்தால் அதனை ஏற்க முடியாது என்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் மற்றும் உலக மீனவ சம்மேளத்தின் சிறப்புப் பிரதிநிதியுமான திரு. ஹர்மன் குமார தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணைய வளாகத்தில் நடைபெற்ற இந்திய இழுவைப் படகுகளினால் வட புலத்து மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் இந்தியாவில் நடைபெறும் பேச்சு வார்த்தை தொடர்பான குறித்த ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
2002ஆம் ஆண்டில் இடம்பெற்ற சமாதான நடவடிக்கைக்கு பின்னர் வட புலத்து மீனவர்களுடன் இணைந்து வடபுலத்து மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இணைந்து செயற்படுகின்றோம், இன்றும் செயற்பட்டுவருகின்றோம்.
2004ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான கலந்துரையாடலில் பங்குகொண்டுவருகின்றோம். 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாங்கள் இந்தியா சென்று மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு முடிவுக்கு வரக்கூடியதாக இருந்தது. 2010ஆம் ஆண்டு சென்றபோது இராமேஸ்வரம் – நாகபட்டினம் வரையான கரையோரப் பிரதேசங்களின் மக்களைச் சந்தித்து உண்மையான நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தி ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். 2011 ஆகஸ்ட் 31 அன்று எந்தவித காரணத்தைக் கொண்டும் இந்திய இழுவைப்படகுகள் சட்டவிரோதமான முறையில் இலங்கை நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது. என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தைகளின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்த ஆவணங்களை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் பணிப்பாளர் பத்திரணவிடம் கையளித்தோம். ஆனால் இலங்கை அரசாங்கம் தெரிவித்தது, எந்தவிதக் காரணத்தையும் கொண்டும் மீனவர்களுடைய கலந்துரையாடலின் ஊடாக எடுக்கப்படுகின்ற முடிவுகளை நாங்கள் கவனத்தில் எடுக்கமாட்டோம். தாம் அதற்கான முடிவுகளை எடுப்போம் என்று தெரிவித்திருந்தது.
நாங்கள் அப்பொழுது எடுத்த முடிவை இந்த அரசாங்கம் எடுத்திருக்கின்றது.
இது மீனவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் மூலமாகத்தான் இந்தப் பிரச்சினைக்கான சரியான ஒரு முடிவினை நோக்கி செல்ல முடியும். மீனவர்களுடன் கலந்துரையாடி முடிவெடுக்குமாறு நாங்கள் அன்றே சொல்லியிருந்த விடயத்தினை செவிமடுத்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
தற்போதைய கலந்துரையாடல் (டெல்கி) தொடர்பில் நாங்கள் மகிழ்வடைகின்ற அதேவேளை கவலையும் அடைகின்றோம்.பல வருடங்களாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்பதற்கு முன் நின்று உழைத்த பல மீனவர் தலைவர்கள் இருக்கிறார்கள் பல கால அனுபவங்கள் உள்ளன, பல விடயங்கள் உள்ளன. அவர்களிடம் இருந்து அவற்றினைப் பெற்றிருக்கலாம். இவர்களை ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு புதிய குழுக்களை வைத்து பேச்சுக்களில் ஈடுபடுவது கவலைக்குரியவிடயம். புதிய குழுவை பேச்சுக்களில் ஈடுபடுத்தினாலும் கூட அனுபவம் மிக்கவர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கலாம். எந்த எந்த விடயங்களை கதைக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்படாமல் செல்வது தான்தோன்றித்தமானது.
இந்தியாவில் உள்ள தென்னிலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்றாலும் இன்று புது டெல்கியில் நடைபெறுகின்ற மாநாடு அவர்களை விடுதலை செய்வதை மட்டும் நோக்கமாகக் கொண்டதாக இருந்தால் அதனை ஏற்க முடியாது. என்றும் தெரிவித்தார்.
குறித்த ஊடக மாநாட்டில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்குகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment