Pages

Thursday, January 2, 2014

ஹெராயின் கடத்தல் விவகாரம்: பாக். சூத்திரதாரியை கொண்டுவர ‘இன்டர் போல்!

Thursday, January 02, 2014
இலங்கை::கொழும்பு துறைமுகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான பாகிஸ்தான் பிரஜையை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கு பொலிஸ் திணைக்களம் இன்டர்போலின் உதவியை நாடியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறினார்.
 
இலங்கைக்குள் அண்மையில் கடத்தப்பட்ட 150 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருள் உள்ளிட்ட பல கடத்தல் சம்பவங்களை குறித்த பாகிஸ்தான் பிரஜையே அவரது தாய்நாட்டிலிருந்து இயக்கி வருவது சாட்சியங்களுடன் உறுதியாகியிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
 
ஹெராயின் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்குள் கொண்டுவருவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்து வருகிறதெனவும் அவர் கூறினார்.
இவ்விடயத்தினை பாகிஸ்தான் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கூடாக சந்தேக நபரை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுப்பது தொடர்பில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவரை இலங்கைக்குப் பெற்றுத்தர வேண்டுமென ஏற்கனவே இன்டர் போலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய பாகிஸ்தான், பிரதான சூத்திரதாரி குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேநேரம், இலங்கை பொலிஸ் திணைக்களத்துடன் பேச்சு நடத்தும் முகமாக இரு பாகிஸ்தான் அதிகாரிகள் கொழும்பு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment