Saturday, January 18, 2014

இலங்கை சிறையிலிருந்து தமிழகத்தைச் சார்ந்த 121 மீனவர்கள் விடுதலை!

Saturday, January 18, 2014
சென்னை::முதல்வர் ஜெயலலிதாவின் துரித நடவடிக்கையால் இலங்கை சிறையிலிருந்து தமிழகத்தைச் சார்ந்த 121 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:_
தமிழக மீனவர்கள் கடல் எல்லையை கடந்து வந்து மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கைப் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் போது அவர்களை மீட்க  முதல்வர் ஜெயலலிதா  உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  இதன் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டபோதும், அவர்கள் துரிதமாக விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 
இந்தப் பிரச்சனைக்கு  தீர்வு காண, தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மீனவச் சங்கங்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில்  2013_ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையினை சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்றும், இதற்கு உரிய அனுமதியினை அளிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும் இலங்கை மீனவர்கள் சார்பில் கூட்டத்தில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டு முதல்வர் ஜெயலலிதா பாரதப் பிரதமருக்கு 20.9.2013 அன்று ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.       
அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு தனது 23.12.2013 நாளிட்ட கடிதத்தில், இரு நாட்டு மீனவர்கள் கூட்டத்தை 
ஜனவரி 20_ஆம் தேதி அன்று வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்து, அந்தக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் கூட்டத்தில் கலந்துக் கொள்வோர் விவரப் பட்டியலை அனுப்பி வைத்தது.    
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில்  20.1.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ள இரு நாட்டு மீனவர்களின் கூட்டம் தொடர்பாக, தமிழக அரசின் மீன்வளத்துறை செயலாளர்  மைய அரசிலுள்ள அதிகாரிகளுடன் விவாதித்தார்.  அப்போது இரு நாட்டு மீனவர்களின்  கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு, சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவித்தால், பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற வழி வகுக்கும் என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில்  இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும்  தமிழக மீனவர்களை 13.1.2014 முதல் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்குமென தெரிவித்த மத்திய அரசு, தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 179 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.  அதன்படி, தமிழக சிறையிலுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை துவக்குமாறு முதலர் ஜெயலலிதா 11.1.2014 அன்று உத்தரவிட்டார்.  
முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியின் பயனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 மீனவர்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 22 மீனவர்கள் என மொத்தம் 52 மீனவர்கள் 13.1.2014 அன்று விடுவிக்கப்பட்டனர். அதேபோன்று, புழல் சிறையிலிருந்து 52 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  தமிழகத்தைச் சேர்ந்த 30 மீனவர்களும் 16.1.2014 அன்று காரைக்கால் வந்தடைந்தனர்.  முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வரவேற்று  தமிழக அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 
நேற்று (17.1.2014) இலங்கை சிறையிலிருந்து தமிழகத்தைச் சார்ந்த 121 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுளளனர். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி 61 இலங்கை மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 121 தமிழக மீனவர்கள் இன்னும் ஒரிரு தினங்களில் தமிழகம் வந்து சேர்வார்கள். 
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment