Pages

Wednesday, December 11, 2013

உலக நாடுகள் பலவற்றில் அமெரிக்காவுக்காக கனடா உளவு பார்த்தது ஆவணத்தில் திடுக் தகவல்!!

Wednesday, December 11, 2013
மான்ட்ரியல்::அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்புக்காக, உலக நாடுகள் பலவற்றை கனடா உளவு பார்த்தது என்று ஆவணங்களில் இருந்து திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.இதுகுறித்து சிபிசி தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில் வெளியான செய்தியில் கூறப்பட்டதாவது:

கனடா அரசின் தொலைத் தொடர்பு நிறுவனம், ‘கனடா தகவல் பாதுகாப்பு நிறுவனம்’. சுருக்கமாக இது சிஎஸ்இசி என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் உளவு பார்க்க முடியாத சில விஷயங்களையும் கனடாவில் உளவு பார்க்கலாம். புவியியல் ரீதியாக கனடாவில் இதற்கான வாய்ப்புகள் உள்ளன.இதன் அடிப்படையில் சிஎஸ்இசியுடன் இணைந்து, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பான என்எஸ்ஏ 20 நாடுகளை உளவு பார்த்துள்ளது.

இதில் முக்கியமான விஷயம், இந்த நாடுகள், அமெரிக்காவுடன் நெருங்கிய வர்த்தக தொடர்பை வைத்துக் கொண்டிருப்பவை.இந்த விஷயத்தில் தனக்கு நெருக்கமான நாடுகளையும் கூட அமெரிக்கா கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனம் மூலம் உளவு பார்த்துள்ளது. இந்நாட்டு தலைவர்களின் எண்ணம் என்ன, அவை எந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேம்படுத்துகின்றன என்பது தொடர்பாகவும், பல்வேறு ரகசிய தகவல்களையும் திரட்டியுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல்-3ம் தேதியிட்ட 4 பக்க ரகசிய ஆவணத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் அடங்கியுள்ளன. அதில் உள்ள விஷயங்களை இப்போதைக்கு வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.என்எஸ்ஏவில் உயரதிகாரியாக பணியாற்றிய தாமஸ் டிராக் என்பவர், தற்போது அமெரிக்காவின் உளவு நடவடிக்கைக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘2010ம் ஆண்டு கனடாவில் நடந்த ஜி20 மாநாட்டின் போது, தலைவர்களின் பேச்சை முழுமையாக அமெரிக்கா ஒட்டு கேட்டுள்ளது.

இதேபோல் ஜி-8 நாடுகளின் தலைவர்களின் பேச்சையும் ஒட்டுக்கேட்டுள்ளது’’ என்றார்.இந்த செயல்களின், தன்னுடைய நட்பு நாடுகளையே அமெரிக்கா உளவு பார்த்துள்ளது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.இவ்வாறு சிபிசி தொலைக்காட்சி கூறியது.ஏற்கனவே, என்எஸ்ஏ கம்ப்யூட்டர் அதிகாரி ஸ்னோடென் வெளியிட்ட தகவல்களே உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சிபிசியின் இந்த செய்தி, அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment