Tuesday, December 10, 2013

சிங்களவர்களை எங்கே குடியேற்றுவது? வட மாகாண சபையில்செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி!


Tuesday 10 December 2013
இலங்கை::வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது' என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (10) கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.

வலி. வடக்கில் இடம்பெறுகின்ற வீடழிப்பினை கண்டித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கோசங்களை எழும்பியுள்ளனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே செனவிரத்ன எ.டி.தர்மபால மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,  யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் தாங்களாகவே விரும்பியே கொழும்பில் குடியேறியுள்ளனர்' என தெரிவித்தார்.

தற்போது இராணுவமும் அரசும் வடக்கில் சிங்கள மக்களை திட்டமிட்டு குடியேற்றி வருகின்றது. யாழ்ப்பாண தமிழ் மக்கள் தாங்களாகவே விரும்பி கொழும்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையிலும் 1983ஆம் ஆண்டு கொழும்பிலிருந்த தமிழ் மக்கள் அரசாங்கத்தினால் விரட்டியடிக்கப்பட்டனர்.

இதனால் தான் பல தமிழ் மக்கள் தமது உயிர் பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று வசித்து வருகின்றனர். வலி. வடக்கில் இடம்பெறுகின்ற வீடழிப்பினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்' என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்..
 
புலிகளின் சிவில் சமூகத்தை சேர்ந்தவரை ஆளுநராக நியமிக்கவும்: (புலிகளின்) வட மாகாண சபையில் பிரேரணை!
 
சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதன்போதே ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணை சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
சிவில் சமூகத்தைச் சேர்ந்த வட மாகாண தமிழர் ஒருவரே ஆளுநராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையொன்றை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையில் முன்வைத்தார்.
 
இந்த பிரேரணையை ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன் வழிமொழிந்தார். எனினும் இந்த பிரேரணையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி. தர்மபாலா வேண்டுகோள் விடுத்தார்.
 
இதனையடுத்து, குறித்த பிரேரணையிலுள்ள "தமிழர்" என்ற சொல்லை நீக்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழர் என்ற சொல் வேண்டாம் என்றால் வட மாகாணத்தை சேர்ந்த ஒருவர் என்பதையும் நீக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன தெரிவித்தார்.
 
இறுதியாக சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது. இது அனைத்து உறுப்பினர்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து ஏகமனதாக சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
 
அத்துடன் வடக்கில் இராணுவத்தை அகற்றி சிவில் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற  பிரேரணையும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. இதனை மாகாண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் வழிமொழிந்தார். இப்பிரேரணையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது...
 
2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் பத்து கோரிக்கைகளை முன்வைத்து வட மாகாண சபையினுள் போராட்டம்!
 
வட மாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் இன்று (10) வட மாகாண மாநாட்டு மண்டபத்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
10 கோரிக்கைகளை முன்வைத்து வட மாகாண சபை உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் தலைமையில் மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
 
10 கோரிக்கைகளை எழுதிய அட்டைகளை வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கிய சிவாஜிலிங்கம், தனது போராட்டத்திற்கு ஆதரவு கோரியுள்ளார்.
 
இதன்போது மாகாணசபை உறுப்பினர்களும் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
01) தமிழின படுகொலை, மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை.
 
02) இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் எங்கே? அரசே பதில் கூறு
 
03) காணாமற்போனோர் எங்கே? அரசே பதில் கூறு
 
04) வலி. வடக்கில் 6,300 காணி சுவீகரிக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்து
 
05) வடக்கு மாகாணத்தில் இராணுவ குடியேற்றத்தை உடன் நிறுத்து
 
06) தமிழர் தாயகத்தில் நடைபெறும் சிங்கள குடியேற்றத்தை நிறுத்து
 
07) வலி. வடக்கிற்கு சென்ற வடமாகாண முதலமைச்சரை தடுத்து
நிறுத்தியவர்களை வெறியேற்று
 
08) வலி. வடக்கிற்கு சென்ற வடமாகாண முதலமைச்சரை தடுத்து நிறுத்தியமை அடிப்படை மனித உரிமை மீறல்
 
09) இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டு, இராணுவமே வெளியேறு
 
10) தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்.
போன்ற 10 கோரிக்களை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
 
(புலிகளின் புதிய அனைத்துலக நிர்வாக குழுவின் நிதி பொறுப்பாளர்: வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்!)

No comments:

Post a Comment