Tuesday, December 10, 2013

ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷிக்கும் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் சந்திப்பு!

Tuesday 10 December 2013
இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் சந்தி;ப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு அமைச்சரின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜப்பானிற்கான இலங்கை தூதுவர் ரியர் அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"அடுத்த வருட மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கு இலங்கை முகம் கொடுக்க வேண்டியுள்ள விதம் மற்றும் அது தொடர்பான சிக்கல்கள் பற்றி ஜப்பான் நாட்டின் விசேட பிரதிநிதியுடன் கலந்துரையாடினேன்.

நீதியமைச்சினால் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் கருத்து பாரிமாற்றம் செய்து கொண்டோம். விசேடமாக அடுத்த வருட மார்ச் மாதத்திற்குள் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

அதேபோல புலனாய்வு விசாரணை மற்றும் முடிவு பெறாத வழக்குகள் துரிதமாக முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் யசூஷி அகாஷியுடனான சந்திப்பில் பேசப்பட்டது.யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இனங்களுக்கிடையே சகவாழ்வு மலர்ந்துகொண்டிருப்பது பற்றியும் அவதானத்தை செலுத்தினோம்.

இடம்பெயர்ந்தோருக்கான சட்டங்கள் மற்றும் மீள்குடியமர்த்தலில் உள்ள சிக்கல்கள் குறித்து பேசினோம். ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் ஜப்பானின் ஆதரவு இலங்கைக்கு கிடைக்கும் என யசூஷி அகாஷி உறுதியளித்துள்ளார்" என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment