Pages

Thursday, December 5, 2013

உலக தலைவர்களின் டெலிபோன் பேச்சை அமெரிக்கா ஒட்டு கேட்ட நடவடிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல: முன்னாள் அதிபர் பில் கிளின்டன்!

Thursday, December 05, 2013
இலங்கை::வாஷிங்டன்::உலக தலைவர்களின் டெலிபோன் பேச்சை அமெரிக்கா ஒட்டு கேட்ட நடவடிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்று முன்னாள் அதிபர் பில் கிளின்டன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் தேசிய உளவு நிறுவனமான என்எஸ்ஏ உலக தலைவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்டதாக அதன் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்நோடென் வெளிப்படுத்தினார். அவர் தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தஞ்சம் அடைந்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் பியூசன் இணையதளத்திற்கு முன்னாள் அதிபர் பில் கிளின்டன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
என்எஸ்ஏ நடவடிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. உலக தலைவர்களின் பேச்சுகளை ஒட்டு கேட்பது தொடர்பாக வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகமான விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா, பிரேசில் அதிபர் தில்மா ரவுசெப் ஆகியோர் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கண்டித்துள்ளனர். நாம் யாருடைய பேச்சை ஒட்டு கேட்கிறோம் என்பதைப் பொறுத்து இந்த விவகாரத்தின் தன்மை அடங்கியுள்ளது. நட்பு நாடுகளே நமக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவது போல் நாம் கருதினால், நாம் அதை செய்யலாம். ஆனால் இதை பற்றி என்னால் உறுதியாக கூற முடியாது.

இன்றைய நடவடிக்கைகளை பார்க்கும்போது, அரசாங்கத்திற்கு இதில் போதிய திறமை இல்லை என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. மீடியாக்கள்தான் இதனை ஊதி பெரிதாக்கிவிட்டதாக ஒபாமாவும் அவரது கூட்டாளிகளும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் தகவல்களை திரட்டிய விவகாரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இப்போது நமது விவகாரம் வெளியே வந்துள்ளது. நாளை இதேபோல் வேறு நாடுகளின் வேவு நடவடிக்கையும் வெளியாகும் அல்லது அவர்கள் நம்மிடமே அனுமதியும் அளிக்கலாம்.இவ்வாறு கிளின்டன் கூறியுள்ளார்.

கிளின்டனின் மனைவி யும், அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி, வரும் 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் சூழலில் ஒபாமா அரசு மீதான கிளின்டனின் அதிருப்தி உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

No comments:

Post a Comment