Pages

Wednesday, December 18, 2013

மார்கழி வழிபாடு!!

Wednesday, December 18, 2013
சென்னை::மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகம் பாடிய திருவெம்பாவையும் பொருள் அறிந்து பாடி நல்லாசி பெறுங்கள்
 
திருப்பாவை: பாடல் - 3
 
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
 
பொருள்:
 
பெண்களே! உத்தமனாகிய நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டவன். அவனது பெருமை குறித்து பாடிய படியே நீராடுவோம். நம் பாவைக்கு மலர் சூடுவோம். இந்த விரதத்தால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்யும். வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கி கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள், அதிகமான பால் தரும். என்றும் வற்றாத செல்வத்தையும் இந்த விரதம் தரும்.
 
திருவெம்பாவை: பாடல் - 3
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
 
பொருள்:
முத்தான வெண்ணிறப் பற்களைக் கொண்டவளே! முன்பெல்லாம், நாங்கள் வந்து எழுப்பும் முன்பே, நீ தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் இனிக்க இனிக்க பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற,'' என்கிறார்கள். தூங்கிக் கொண்டிருந்த தோழி, ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் இந்தளவு கடுமை காட்ட வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதத்தில் அனுபவமில்லை.
 
மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே!'' என வருந்துகிறாள். வந்த தோழியர் அவளிடம், ""அடியே! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர் களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்கும் தெரியும். நீ சீக்கிரம் எழவே உன்னை அவசரப்படுத்தினோம்,'' என்றனர்.
 

No comments:

Post a Comment