Monday, December 16, 2013

அதிமுக,திமுக,காங், பா.ஜனதா பாராளுமன்ற தேர்தலில் 4 முனை போட்டி:தேமுதிக நிலை என்ன?!

Monday, December 16, 2013
சென்னை::பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் – மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. 6 அல்லது 7 கட்டங்களாக தேர்தலை நடத்த தலைமை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் தயாராகி வருகின்றன.
 
இந்த தேர்தலை பொருத்தவரை யாருடன் கூட்டணி அமைப்பது? எத்தனை இடங்களை பெறுவது? எந்தெந்த இடங்களை பெறுவது? ஆகிய மூன்றும் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன.
இதில் முதல் கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆளும் அ.தி.மு.க. 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அ.தி.மு.க. அணியில் இடது சாரி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. ஆதரவு கட்சிகள் நீடிக்கும்.

இந்த நிலையில் தி.மு.க.வும் நேற்று தனது கூட்டணி முடிவை தெள்ளத் தெளிவாக வெளியிட்டது. இது தொடர்பாக பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தார்.

இதன் மூலம் தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி பற்றிய தெளிவு ஏற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக திரைமறைவு ரகசிய பேச்சுவார்த்தைகள் தீவிரமாகியுள்ளன.

தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலைப்படி பாராளுமன்ற தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை தலைமையில் கூட்டணி உருவாகும் சூழ்நிலை எழுந்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் அந்த கட்சியின் ஆதரவு கட்சிகள் நீடிப்பது போல தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இடம் பெறும். தி.மு.க. அணியில் மேலும் சில கட்சிகளைச் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகிறது.

நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. வந்தால் ஏற்றுக் கொள்வோம். இல்லையெனில் அது பற்றி கவலைப்படாமல் தனித்து நின்றே தேர்தலை எதிர்கொள்ளலாம் என்ற மனநிலை தி.மு.க. நிர்வாகிகளிடம் நிலவுகிறது. அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த ஏற்காடு இடைத்தேர்தலில் யார் துணையும் இல்லாமல் தி.மு.க. 30 சதவீத ஓட்டுக்கள் பெற்றதே காரணமாகும்.

தமிழ்நாட்டில் தலித் ஓட்டுக்களும், முஸ்லிம் ஓட்டுக்களும் சுமார் 30 சதவீதம் உள்ளன. அதில் கணிசமான அளவு ஓட்டு கிடைக்கும் என்று தி.மு.க. நம்புகிறது.

எனவே தே.மு.தி.க. வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி தி.மு.க. அதுபற்றி கவலைப்படாமல் அடுத்தக் கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது.

அ.தி.மு.க., தி.மு.க. இரு பெரிய கட்சிகளும் தங்கள் ஆதரவு கட்சிகளுடன் செல்ல உள்ள நிலையில், பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் தலைமையில் ஒருவலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழருவி மணியன் துணையுடன் நடந்த இந்த முயற்சிகளில் பா.ஜ.க.வுக்கு 90 சதவீத வெற்றி கிடைத்துள்ளது.

பா.ஜ.க. தலைமையிலான அணியில் முதல் நபராக ம.தி.மு.க.வின் வைகோ சென்று சேர்ந்துள்ளார். அடுத்து அந்த அணியில் பா.ம.க.வும் சேர வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது தவிர தென்மாவட்ட மற்றும் கொங்கு மண்டல சாதி கட்சிகளையும் பா.ஜ.க.வுடன் ஒருங்கிணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் பா.ஜ.க. தலைமையிலான அணி வலுப்பெற்று வருகிறது.

இந்த நிலையில் எல்லாரது பார்வையும் தே.மு.தி.க. மீது திரும்பி இருக்கிறது. தே.மு.தி.க.வை தங்கள் அணிக்குள் கொண்டு வர தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் விரும்புகின்றன. இதில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையாநாயுடு சுமார் 6 மாதத்துக்கு முன்பே தே.மு.தி.க. மூத்த தலைவர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் எந்த உடன்பாடும் ஏற்பட வில்லை.

இதற்கிடையே தி.மு.க. வும் தே.மு.தி.க.வை வளைக்க திட்டமிட்டது. ‘‘விஜயகாந்த் வெள்ளை மனம் படைத்தவர்’’ என்று கருணாநிதி பாராட்டிப் பேசினார்.

அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், ‘‘என் திருமண மண்டபத்தை இடிக்கும் போது எனக்கு வெள்ளை உள்ளம் இருப்பது தெரிய வில்லையா?’’ என்றார். இதனால் தி.மு.க.வுடன் விஜயகாந்துக்கு ஒருமித்த மனநிலை இல்லை என்பது தெரிய வந்தது.

தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடாது. அப்படி போட்டியிட்டால் அந்த கட்சிக்கு 10 முதல் 12 சதவீத ஓட்டுக்களே கிடைக்கும். அதை வைத்து ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.

எனவே தே.மு.தி.க. ஏதாவது ஒரு பெரிய அணியில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அந்த வகையில் தே.மு.தி.க.வை பாரதீய ஜனதா அணிக்கு அழைத்து வரும் முயற்சிகளில் தமிழருவி மணியன் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக தே.மு. தி.க. நிலையை அடுத்த மாதம் (ஜனவரி) அறிவிக்கப் போவதாக விஜயகாந்த் கூறியுள்ளார். தற்போதைய நிலவரப்படி தி.மு.க. அல்லது பா.ஜ.க. ஆகிய இரு அணியில் ஒன்றில்தான் தே.மு.தி.க. சேர முடியும்.

தி.மு.க.வில் ஒரு சாராரிடம் தே.மு.தி.க.வுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் தி.மு.க. அணியில் தே.மு.தி.க. எதிர்பார்க்கும் அளவுக்கு சீட்டு கொடுப்பார்களா? என்று கூற முடியாது.

அதே சமயத்தில் பா.ஜ.க. அணியில் தே.மு. தி.க.வுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கலாம். மேலும் பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும் என்ற எண்ணம் நாடெங்கும் உள்ளது. எனவே அந்த வெற்றி குதிரையில் ஏறவே தே.மு.தி.க. முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் உருவாகி வரும் இத்தகைய அரசியல் கூட்டணி மாற்றங்களில் மிக, மிக பரிதாபமான நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. ஊழல்களாலும், விலை வாசி உயர்வாலும் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க ராஜ பக்சேக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்த உதவிகள், தமிழக மக்கள் மனதில் ஆறாத காயங்களாக உள்ளன. எனவே காங்கிரசுக்கு பெரும் இழப்பு ஏற்டலாம்.

பாராளுமன்ற தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்பட்டாலும் உண்மையில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான அணிகளிடையேதான் மும்முனைப் போட்டி நிலவும். இந்த மும் முனைப் போட்டியில் நிச்சயமாக ஓட்டுகள் சிதறும்.

சட்டசபை தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடிட முடியாத படி மூன்று விதமாக ஓட்டுக்கள் பிரியும். அப்படி ஓட்டு பிரியும் போது யாருக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அந்த வெற்றி 3 கூட்டணிகளிலும் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில்
போட்டியிடுகின்றன? எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன? என்பதை பொறுத்தே அமையும். எனவே வெற்றியை நிர்ணயிப்பதில் இடப்பங்கீடு, தொகுதிப் பங்கீடு ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment