Wednesday, November 06, 2013
துடெல்லி::இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் செல்லாத பட்சத்தில் குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரியும் செல்ல மாட்டார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை தலைநகர் கொழும்புவில் அடுத்த வாரம் காமன்வெல்த் மாநாடு நடைபெற இருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களை கண்டிக்கும் வகையில் இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தமிழக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசில் உள்ள தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்களும் பிரதமர் செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளாவை சேர்ந்த அந்தோணியும் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இலங்கை பயணம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் இலங்கை செல்ல காங்கிரஸ் மேலிடம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்து விட்டதாக செய்தி வெளியானது. இதை மத்திய அரசு உடனடியாக மறுத்தது. இது தொடர்பாக முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டது. பிரதமர் பங்கேற்காத பட்சத்தில் இந்தியாவின் சார்பாக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்து கொள்வார் என யூகங்கள் வெளியாயின. கடந்த 2011ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அன்சாரி தான் இந்தியா சார்பில் கலந்து கொண்டார். அது போல இந்த முறையும் அன்சாரி கலந்து கொள்வார் என கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு பணிந்து காமன் வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணிப்பதாக இருந்தால், அவருக்கு பதிலாக அன்சாரியும் இலங்கை செல்ல மாட்டார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்ததாகவும் அதன் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. காமன்வெல்த் மாநாட்டை ஒட்டி காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டமும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார். பிரதமர் கலந்து கொள்ளாத பட்சத்தில் இந்தியா சார்பாக குர்ஷித் கலந்து கொள்வார் என தெரிகிறது.

No comments:
Post a Comment