Monday, November 4, 2013

காமன்வெல்த் நாடுகள் மாநாடு: மன்மோகன்சிங் இலங்கை செல்ல 2 மத்திய மந்திரிகள் எதிர்ப்பு!

Monday, November 04, 2013
புதுடெல்லி::இலங்கை தலைநகர் கொழும்பில், வருகிற 15 முதல் 17-ந்தேதி வரை காமன்வெல்த் நாடுகள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது என்று, காங்கிரஸ் மேலிட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்ல 2 மத்திய மந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
 
மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, ஜி.கே.வாசன் ஆகியோரும் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஜி.கே.வாசன், ஏற்கனவே பிரதமர் மன்மோகன்சிங்கை டெல்லியில் நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்.

மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித், பிரதமர் இலங்கை செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறி வந்தாலும், பிரதமர் மாநாட்டில் பங்கேற்பதே இலங்கை தமிழர்களுக்கு நல்லது என்று கருத்து தெரிவித்து வருகிறார்.

அதேபோல் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், உளவு துறை அதிகாரிகள் உள்ளிட்ட வெளியுறவு கொள்கை ஆலோசகர்கள், பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்கள்.

இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், இலங்கை சீனா பக்கம் சாய்ந்துவிடாமல் தடுக்கவும் பிரதமர் கலந்து கொள்வது அவசியம் என்பது அவர்கள் தரப்பு வாதமாகும். இருப்பினும் மத்திய மந்திரிகளும், தமிழகத்தில் காங்கிரசின் முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க.வும் பிரதமர் இலங்கை செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால், அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து, விரைவில் மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment