Pages

Monday, October 14, 2013

பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டு செய்திகளை எழுதுவதற்காக அடையாள அட்டைகளை கோரி விண்ணப்பிக்கும் சர்வதேச ஊடகவியலாளர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்த பின்னரே அவர்களுக்கான ID வழங்கப்படும்: கெஹலிய ரம்புக்வெல்ல!

Monday, October,14, 2013
இலங்கை::இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டு செய்திகளை எழுதுவதற்காக அடையாள அட்டைகளை கோரி விண்ணப்பிக்கும் சர்வதேச ஊடகவியலாளர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்த்த பின்னரே அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற 2011ம் ஆண்டின் உச்சிமாநாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை அங்கீகரிக்கும் அணுகுமுறையையே இலங்கையும் பின்பற்றும். இந்த உச்சிமாநாட்டின் போது வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் பின்னணியை தெரிந்து கொண்ட பின்னர் அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டை கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
 
பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு வந்து செய்திகளை திரட்டுவார்கள் என்று இலங்கை அரசாங்கம் அச்சம் கொண்டிருக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்த உச்சிமாநாட்டுக்கு எந்த ஊடகத்திலிருந்து ஊடகவியலாளர்கள் வருகிறார்கள் என்பதை நாம் பொருட்படுத்தப் போவதில்லை என்று தெரிவித்தார்.
 
ஆயினும் வெளிநாட்டு ஊடகங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை மீளாய்வு செய்த பின்னரே லண்டனில் உள்ள பொதுநலவாய நாட்டு செயலகத்தின் நடைமுறைக்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டைகள் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
சில வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு இவ்விதம் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டைகள் கொடுக்கப்படாமலும் இருக்கலாமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இதுபோன்ற சர்வதேச ஊடகவிய லாளர்களுக்கு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மாநாட்டிலும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
 
நாம் கடைப்பிடிக்கும் வழிமுறைக்கு ஏற்புடைய வகையில் அமைந்துள்ள விண்ணப்பங்களுக்கே அனுமதி அளிப்போம் என்றும் தெரிவித்தார். நோ வோர் ஷோன், கில்லிங் பீல்ஸ் ஒப் ஸ்ரீலங்கா போன்ற குறுந் திரைப்படங்களை தயாரித்த பிரிட்டனின் சனல் 4 ஊடகவியலா ளர்களான கெலன் மக்கரே போன்றவர்கள் ஏற்கனவே இங்கு வந்திருக்கிறார்களா என்பதை அரசாங்கம் விசாரணைக்கு உட்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேவை ஏற்படும் போது சகல சர்வதேச ஊடகவியலாளர்கள் பற்றியும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் என்று கூறினார்.
 
பொதுநலவாய நாடுகளின் 2013ம் ஆண்டு உச்சிமாநாட்டுக்கான கொழும்பில் உள்ள செயலகம் உச்சிமாநாட்டுக்கான செய்திகள் எழுதுவதற்கு யார் தகுதியுடையவர்கள் என்பது பற்றி தீர்மானிக்கும் என்றார். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் விண்ணப்பிக்கும் போது அவற்றை ஆய்வு செய்து அதற்கான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment