Pages

Monday, October 21, 2013

புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழர் அமைப்புக்களின் கட்டுக்கதைகளைக் கேட்டு பின்வாங்காமல் நேரில் வந்து உண்மை நிலையினைக் கண்டறியுமாறு கனடா உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு வேண்டுகோள்! நியோமல் பெரேரா!

Monday, October 21, 2013
இலங்கை::புலம்பெயர் புலிகள் ஆதரவு  தமிழர் அமைப்புக்களின் கட்டுக்கதைகளைக் கேட்டு பின்வாங்காமல் நேரில் வந்து உண்மை நிலையினைக் கண்டறியுமாறு கனடா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களை கேட்டுக்கொள்வதாக வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.
 
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு களநிலவரங்களை நேரில் ஆராய்வதற்கு சிறந்த சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதனால், மேற்படி நாடுகள் தவறாது இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.பொதுநலவாய உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வாரா? இல்லையா? என்பது குறித்து இந்திய அரசாங்கம் இதுவரை திட்டவட்டமாக அறிவிக்காத போதிலும் அந்நாட்டின் முழுமையான ஒத்துழைப்பு மாநாட்டிற்கு கிடைக்குமென் பதில் நாம் உறுதியாகவிருக்கிறோமெனத் தெரிவித்த பிரதியமைச்சர்,

இந்திய பிரதமர் வரமுடியாத பட்சத்தில் அவர் சார்பில் வரக்கூடிய ஏனைய பிரதிநிதிகளை கெளரவிக்க அரசாங்கம் தயாராகவிருப்ப தாகவும் கூறினார்.கனடா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வாழும் புலிகள் ஆதரவு  புலம்பெயர் தமிழர்கள் பொதுநலவாய உச்சி மாநாட்டில் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்வதனை தடுக்கும் முகமாக பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல கற்பனைக் கதைகளை உருவாக்குகிறார்கள். இவர்களை ஆசுவாசப்படுத்தும் வகையிலேயே கனடா இலங்கையில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டினை பகிஷ்கரித்துள்ளதுடன் நியூசிலாந்து மற்றும் பிரித்தானிய அரசாங்கங்கள் மனித உரிமைகள் தொடர்பில் அழுத்தம் கொடுப்பதற்காக மாநாட்டில் பங்கெடுக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளன என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

கனேடிய அரசாங்கம் வெளியிலிருந்து இலங்கைக்கு கல்லடிப்பதனை விடுத்து நேரில் வந்து நிலைமைகளை ஆராய்வதன் மூலமே அவர்கள் மனக் கண் முன்னிருக்கும் சந்தேகங்களுக்கு தீர்வு பிறக்கும் என்றும் அவர் கூறினார்.இதேவேளை, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றஞ் சுமத்தியுள்ளமை வியப்புக்குரியது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

யுத்தமில்லாத நாடுகளில் கூட மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. உலகிலேயே மிகக் கொடிய பயங்கரவாதிகளான எல். ரி. ரி. ஈ. யினரை ஒழித்து, அவர்களது கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு தேர்தல் மூலம் ஜனநாயகத்தினை இந்த அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது.புலிகளின் செயற்பாடுகளே மனித உரிமைகளை மீறுவதாக அமைந்திருந்தன. இப்போது வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் வாழ்கின்றனர்.

பிரிட்டன் மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையின் கள நிலைமையை நேரில் வந்து பார்ப்பார்களாயின் உண்மை நிலையை புரிந்துகொள்வார்களெனவும் கூறினார்.பொதுநலவாய உச்சி மாநாட்டினை கனேடிய அரசாங்கம் பகிஷ்கரித்திருக்கும் அதேவேளை மனித உரிமைகள் தொடர்பில் அழுத்தம் கொடுப்பதற்காகவே மாநாட்டில் கலந்துகொள்வதாக நியூசிலாந்து பிரதமரும் கொழும்புக்கான பிரிட்டிஷ் தூதுவரும் வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதி வெளிவிவகார அமைச்சர் மேற்கண்ட தனது கருத்துக்களை தினகரனுக்குத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment