Monday, October 21, 2013

அமெரிக்க கப்பலின் இன்ஜினியர் மீண்டும் தற்கொலை முயற்சி!!

Monday, October 21, 2013
தூத்துக்குடி::பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கப்பலின் தலைமை இன்ஜினியர் இன்று மீண்டும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அட்வான்போர்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ‘சீமேன் கார்டு ஓகியா‘ என்ற கப்பலை இந்திய கடலோர காவல்படையினர் 11ம் தேதி மடக்கிப் பிடித்தனர். துறைமுகத்தின் 2வது தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்தக் கப்பல் மீது, இந்திய எல்லைக்குள் புகுந்து திருட்டுத்தனமாக 2 ஆயிரம் லிட்டர் டீசல் வாங்கியது, ஆவணங்கள் இல்லாமல் ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கப்பலின் மாலுமிகள் உள்பட 33 பேரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். கப்பல் கேப்டன் டட்னிக் வாலன்டின், தலைமை இன்ஜினியரான உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சிடோரென்கோ வாலொரி ஆகியோர் மட்டும் பராமரிப்பு பணிக்காக கப்பலில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கியூ பிரிவு போலீசார் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் கப்பலுக்கு சென்று மீண்டும் விசாரணை நடத்திய போது மன உளைச்சல் அடைந்த தலைமை இன்ஜினியர் வாலொரி கப்பலின் மேல் பகுதி கொடிக்கம்பத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

இதையடுத்து, கேப்டன் டட்னிக் வாலன்டின், தலைமை இன்ஜினியர் சிடோரென்கோ வாலொரி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான 35 பேரும் ஒரே பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் வழக்கம் போல் காவலர்கள் விடிய விடிய ரோந்து சுற்றி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு தலைமை இன்ஜினியர் வாலொரி தனது சட்டையை கழற்றி கழுத்தில் இறுக்கமாக கட்டி, அங்கிருந்த கம்பியில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த சக ஊழியர்கள் கூச்சல் போடவே ரோந்து பணியில் இருந்த சிறைக் காவலர்கள் ஓடி வந்து வாலொரியை மீட்டு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், கப்பலிலும், சிறையிலும் இன்ஜினியர் அடைக்கப்பட்டதால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்ட 35 பேரில் பால்டவர்ஸ், வில்லியம் இர்விங், நிக்கோலஸ் சிம்சன், ரேமண்ட் டின்டால், நிக் டன், ஜான் ஆர்ம்ஸ்ட்ராங் ஆகியோர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களை சந்திக்க டெல்லி, சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரக அதிகாரிகள் இருவர் இன்று சிறைக்கு வருகின்றனர். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment