Sunday, October 6, 2013

ஈழம் என்ற கனவை காட்டி வடபகுதி மக்களை விக்னேஸ்வரன் நந்திக்கடல் களப்பு நோக்கி அழைத்துச் செல்கிறார்: உதய கம்மன்பில!

Sunday, October 06, 2013
இலங்கை::ஈழம் என்ற கனவை காட்டி வடபகுதி மக்களை விக்னேஸ்வரன் நந்திக்கடல் களப்பு நோக்கி அழைத்துச் செல்கிறார். இதனை செய்ய வேண்டாம் என்று நாங்கள் விக்னேஸ்வரன் ஐயாவிடம் கேட்டுக்கொள்கிறோம்.
 
சமாதானம் என்றால் சமாதானம் போர் என்றால் போர் இந்த இரண்டில் எதனை தெரிவு செய்து விக்னேஸ்வரன் செயற்படப் போகிறார் என்பதை பார்த்து கொண்டிருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
 
ஹோமாகம பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனைக் கூறினார்.
 
மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது. எனினும் நாங்கள் கூறியதை கேட்காமல் அரசாங்கம் வடக்கில் தேர்தலை நடத்தியது.
 
தற்போது வடக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்குமாறு கோரி கோஷமிட்டு வருகின்றனர்.
 
விளையாடக் கூடாது பொருள் ஒன்றை எடுத்து குழந்தை விளையாடும் போது, அதனை தடுத்ததும் குழந்தை அதனையே கேட்டு பலமாக அழும். குழந்தை அழும் போது மீண்டும் அதனை கொடுப்பது போன்ற விடயமாக மாகாண சபை அதிகாரங்கள் தொடர்பான விடயம் காணப்படுகின்றன.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் தேர்தல் போட்டியிட்ட போதும், தேர்தல் நடந்த போதும் நாங்கள் எதிர்வுகூறிய விடயங்களே தற்போது நடந்து வருகின்றன.
 
37 வருடங்கள் வடக்கில் நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அங்குள்ள மக்களின் உறவினர்கள், நண்பர்கள் இறந்து போயினர். அந்த வலியை அவர்கள் தேர்தலில் காட்டினர்.
 
வடக்கில் இருந்து மேற்குலக நாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வடக்கு மக்களுக்கு கூறினர்.
யுத்தத்தில் பெற்றுக்கொள்ள முடியாததை தற்பொழுது தேர்தலில் பெற முயற்சித்து வருகின்றனர்.
 
செல்வநாயகம் மற்றும் பிரபாகரனினால் அடைய முடியாது போன நோக்கத்தை, வடக்கில் உள்ளவர்கள் விக்னேஸ்வரனை பயன்படுத்தி அடைய முயற்சித்து வருகின்றனர்.
 
ஈழம் என்ற கனவை காட்டி தமிழ் மக்களை மீண்டும் நந்திக்கடல் களப்புக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று நாங்கள் விக்னேஸ்வருக்கு கூறிவைக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment