Monday, October 14, 2013

தமிழ்க் கூட்டமைப்பு தமக்குள்ளே இருந்துவரும் புல்லுருவிகளைக் களையெடுக்க வேண்டும். விதண்டாவாதக் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டும் பழைய புலிக்கதையைக் கதைத்துக் கொண்டும் இருப்பவர்களை ஓரங்கட்டிவிட்டு புதிய சிந்தனையுள்ள இளைஞர்களைத் தன்னுடன் அரவணைத்துச் செல்ல வேண்டும்!

Monday, October,14, 2013
இலங்கை::வடமாகாண முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டார். என்னுடைய பதவியின் செயல் பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும், நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது சத்தியப்பிரமாணத்தின்போது ஜனாதிபதியின் முன்பாக உறுதியளித்துள்ளார். இது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல. இது சத்தியப்பிரமாணம். அதிலும் நாட்டின் தலைவருக்கு முன்பாகச் செய்து கொண்ட சத்திய வாக்குறுதி. இதற்குக் கட்டுப்பட்டு நடத்தல் அவசியம். விக்னேஸ்வரன் ஒரு சட்ட மேதை, உயர் நீதிமன்ற நீதவானாக இருந்தவர். அவருக்கு இவை பற்றியோ சட்டம் பற்றியோ எவரும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை.
 
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அரசுடன் இணங்கிச் செல்லும் அவரது பண்பையும், தூரநோக்கிய சிந்தனையையும் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது. இந்த ஒன்றிலிருந்தே அவரது எதிர்காலச் செயற்பாடுகள் நிதானமாகவும், நாட்டின் இறைமையை மதித்து நடப்பதாகவும் அமையவுள்ளமை நன்கு புலனாகிறது. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் அங்கத்தவர் அல்ல. கூட்டமைப்பிலுள்ள எந்தவொரு கூட்டுக் கட்சியிலும் இதுவரை அவர் அங்கத்துவம் பெறவில்லை. தேர்தலில் அவர் பொது வேட்பாளராகவே கூட்டுக் கட்சிகளால் நிறுத்தப்பட்டார். இதன் காரணமாக விக்னேஸ்வரனை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள எந்தவொரு கட்சியும் இவர் எமது கட்சி அங்கத்தவர் என உரிமை கொண்டாட முடியாது. குறிப்பாக கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் மீது விக்னேஸ்வரன் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் என்பது உண்மை.
 
இரா. சம்பந்தனின் சொல்லை விக்னேஸ்வரன் தட்டிக் கழிக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. அதனால்தான் இரா. சம்பந்தனின் கூற் றுக்கு மதிப்பளித்து விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தி யப்பிரமாணம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் சாணக்கியம் மிக்க இரா. சம்பந்தனும் கற்றறிந்த பேராசான் விக்னேஸ்வரனும் இணைந்து தமிழ் மக்களுக்கான அரசியலில் ஈடுபட முன்வந்தமையை அம்மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதிலும் இவ்விரு வரினதும் முதலாவது முடிவான ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யும் முடிவை தமிழ் மக்கள் பெரிதும் வர வேற்றிருக்கிறார்கள். இதுவொரு நல்ல ஆரம்பம் எனத் தமிழ் புத்தி ஜீவிகள், தமிழ்க் கல்விமான்கள், சமயத் தலைவர்கள் எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசியல் அனுபவம் சிறிதும் இல்லாது தமதும், தமது குடும்ப உறவுகளினதும் சொகுசு வாழ்விற்காகத் தமிழ் மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள உதிரிக் கட்சிகள் தமது விதண்டாவாத எதிர்ப்பைத் தெரிவித்திருந்தபோதும் மக்களுக்காகத் துணிந்து செயற்பட்ட இரா. சம்பந்தனையும் அதற்கு இணங்கிச் சென்ற விக்னேஸ்வரனையும் உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.
 
கடந்த முப்பது வருடங்களாகத் தமிழ் மக்கள் பட்ட வலிகள் போதும். இனியாவது நடப்பவை அம்மக்களுக்கு நன்மையளிப்பதாக அமையட்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு நல்லதொரு அடித்தளம் இடப்பட்டுள்ளது. பதவியேற்பு வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்படும் தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உறுதுணையாகச் செயற்படும் எனத் தெரிவித்திருந்தார். உண்மையில் ஜனாதிபதியே முழு நாட்டிற்கும் தலைவர். மத்திய அரசாங்கம் அவரது தலைமையிலேயே இயங்குகிறது. கொடிய பயங்கரவாத யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்து கடந்த நான்கு வருடங்களாக வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்களின் வாழ்வுமுறை மேலோங்கிச் செழிப்புற ஜனாதிபதியே பிரதான காரணமாக இருந்துள்ளார். அவர் நினைத்தால் மக்களது நன்மை கருதி இப்போதும் எதுவும் செய்யலாம் எனும் அளவிற்கு அவரிடம் அதிகாரம் உள்ளது. ஆனாலும் அவர் ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் வழிவிட்டு, வடக்கின் அபிவிருத்திக்கு கடந்த காலங்களில் செயற்பட்டது போன்று மத்திய அரசாங்கம் பக்கபலமாக இருக்கும் எனத் தெரிவித்திருப்பதானது அவரது நற்குணத்தையும், அரசியல் தலைமைத்துப் பண்பையும் காட்டி நிற்கின்றது.
 
ஆனால் கடந்த நான்கு வருட காலமும் இத்தகைய பண்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நாம் காணவில்லை. அவர்களிடம் இல்லாதவொரு பண்பாகவே இது காணப்படுகிறது. அரசாங்கம் என்னதான் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்ட போதும் அரசாங்கத்தை தமிழ்க் கூட்டமைப்பு வசை பாடியே வந்துள்ளது. எனவே ஜனாதிபதியின் இந்த நல்ல சமிக்ஞையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை காலமும் நடந்தவை பற்றியே இனியும் பேசிக் கொண்டிராது இனி நடப்பவை நன்றாக அமைய வேண்டும் எனச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். அதற்கு, முதலாவதாகத் தமிழ்க் கூட்டமைப்பு தமக்குள்ளே இருந்துவரும் புல்லுருவிகளைக் களையெடுக்க வேண்டும். எந்நேரமும் விரோதமான விதண்டாவாதக் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டும் பழைய புலிக்கதையைக் கதைத்துக் கொண்டும் இருப்பவர்களை ஓரங்கட்டிவிட்டு புதிய சிந்தனையுள்ள இளைஞர்களைத் தன்னுடன் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment