இலங்கை::பலாலி விமான நிலையம் விரைவில் தமிழ் மக்களது பயன்பாட்டிற்கான பொது விமான நிலையமாக ஆக்கப்படும். அதே போன்று விரைவில் மன்னார் துறைமுகம் புனரமைக்கப்பட்டு கப்பல் போக்குவரத்துக்களிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்றிருந்த அவர் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்.
இந்த பயணத்தின் போது வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர் சந்தித்துப்பேசினார்.
அதே வேளை யுத்த பாதிப்புக்களை சந்தித்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு வர்த்தகர்கள் சிலருக்கும் தமது வீடமைப்பு திட்ட பயனாளிகளிற்கும் அவர் சான்றிதழ்களை வழங்கினார். இந்தப் பயணங்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகார் பிரசாத் காரியவசம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
யாழ்.நகரில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் தமிழ் மக்கள் மாகாணசபை தேர்தலில் பெற்றுள்ள ஆணையை பலப்படுத்த இந்தியாவுதவுமெனவும் தெரிவித்தார்.முன்னதாக தெல்லிப்பழை பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிகிளில் இந்திய அரசினுதவியின் கீழ் கட்டப்பட்ட இரு வீடுகளையும்; அவர் திறந்து வைத்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பினில் அவருடன் மாவை சேனாதிராசாவும் சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தனர்..
வட மாகாணசபைத் தேர்தலில் இந்தியா மிக முக்கியமான பங்காற்றியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்!
வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றமைக்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதனைப் போன்று, யுத்தம் இடம்பெற்ற பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் உதவிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் கோரியுள்ளார்.
இந்தியா தம்மை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதாக குறிப்பிடவில்லை என்ற போதிலும், வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு இந்தியாவின் நடவடிக்கைகளே வழியமைத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை குறித்து இரண்டு நாடுகளும் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணசபை இரண்டு விதமான நோக்கங்களின் அடிப்படையில் செயற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறுங்கால மற்றும் நீண்ட கால அடிப்படை நோக்கங்களைக் கொண்டதாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் வடக்கை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும்,
கூடுதலான நிதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.
வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



No comments:
Post a Comment