Monday, October 21, 2013
இலங்கை::வட மாகாண சபையினை பொறுத்த வரையில் ஒவ்வொரு கட்சியிலுமுள்ள அங்கத்தவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுத்து ஆட்சி நடத்துவது கடினமானது. நாம் எமக்கு கிடைத்துள்ள பதவிகளை கட்சி அடிப்படையில் பார்க்காது தகுதியடிப்படையிலேயே பார்க்கின்றோம் என்று வட மாகாண சபையின் முதல மைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதன் காரணத்தினாலேயே அண்மைக் காலங்களில் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகளும், மனஸ்தாபங்களும் ஏற்பட்டன. எனினும் இன்று எமது கூட்டமைப்பு ஒற்றுமையாகவே செயற்பட ஆரம்பித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்ட மைப்பானது தமிழ்க் கட்சிகள் பலவற்றை உள்ளடக்கிய மக்கள் கூட்டமைப்பாகும்.
இதில் தமிழரசுக் கட்சியும் ஒரு கூட்டுக் கட்சியாகவே நாம் கருதுகின்றோம். தமிழரசுக் கட்சி தனித்து செயற்படுகின்றது என்ற கூற்றினை ஏற்றுக் கொள்ள முடியாது.
அத்துடன் நாம் முடிந்தவரை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வட மாகாணத்தில் எம்மக்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். வெறுமனே அரசியல் காரணங்களினால் முரண்டு பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை. அதனால் நாம் அரசாங்கத்தை எதிர்க்கப் போவதுமில்லை என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த காலத்தில் முஸ்லிம் தலைமைகள் அம்மக்களுக்கு பாதுகாப்பையும் அவர்களுக்கான உரிமைகளையும் பெற்றுக் கொடுக்காத காரணத்தால் முஸ்லிம் மக்கள் பெரும் துன்பத்திலிருந்தனர். அச்சந்தர்ப்பத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களின் பிரச்சினைகளையும் சர்வதேசம் வரை எடுத்துச் சென்றுள்ளார்.
இதன் காரணத்தினால் முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் அதன் தலைமைத்துவத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment