Tuesday, October 8, 2013

கச்சத்தீவில் இருநாட்டு வர்த்தகமையம்: மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்!

Tuesday, October 08, 2013
நாகர்கோவில்::கச்சத்தீவில் இருநாட்டு வர்த்தகமையம் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.

நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக மீனவர்களின் பிரச்னைகளை தீர்க்க, மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் டிசம்பரில் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து 6 ஆயிரம் படகுகள் கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க செல்கிறது. ஆனால், அதில் ஒரு சில படகுகள் தான் மீண்டும், மீண்டும் சிறை பிடிக்கப்படுகிறது. இதற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சியில், மத்திய அரசு இறங்கியுள்ளது.

தமிழக அரசும், இதற்கு உதவி வருகிறது. கடலுக்கு செல்லும் மீனவர்கள், மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைகளை கடை பிடித்தால், இதுபோன்ற பிரச்னைகள் வராது. கச்சத்தீவு பிரச்னையை பொறுத்த வரை, 2 நாட்டு அரசுகளும் சுமூகமாக பேசி வருகிறது. இங்கு பொதுவான ஒரு வர்த்தக மையத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இந்திய பொருட்களை இலங்கையிலும், இலங்கை பொருட்களை இந்தியாவிலும் விற்பனை செய்யும் பண்டமாற்று வர்த்தக மையமாக இது உருவாகும்.

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெறும். மோடியை மீடியாக்கள் தான் மிகைப்படுத்தி வருகின்றன. குஜராத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டுகள் குறைந்து, காங்கிரசுக்கு அதிகரித்துள்ளது. பாரம்பரியம் மிக்க கன்னியாகுமரி தொகுதியில் காங்., தான் இனி போட்டியிடும். ஆட்சியாளர்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ராகுல் உறுதிபட கூறியுள்ளார். இதை அனைவரும் வரவேற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment