Friday, October 18, 2013

பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வருகை ஏர்போர்ட்டில் தொண்டர்கள் குவிந்தனர்!

Friday, October 18, 2013
சென்னை::பாஜ பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, முதல் முறையாக இன்று பிற்பகல் சென்னை வருகிறார். அவருக்கு தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   பாஜ பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கடந்த 26ம் தேதி திருச்சியில் நடந்த இளந்தாமரை மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அங்கேயே தமிழகத்துக்கான தனது தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார். அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் பா.ஜ. கட்சி தலைவர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில், மீண்டும் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். இதற்காக அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை விமானம் நிலையம் வருகிறார். அவருடன் தேசிய பொது செயலாளர் முரளிதரராவ் உடன் வருகிறார்.

மோடியை வரவேற்க விமான நிலையத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். தொண்டர்கள் குவிந்ததையொட்டி விமான நிலையத்தில் கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாஸ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன், லட்சுமணன், தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், இளைஞர் அணி செயலாளர் வினோஜ் பி.செல்வம், வர்த்தக பிரிவு மாநில துணை தலைவர் வி.எஸ்.ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து மோடியை வரவேற்கின்றனர். பின்னர், விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் தொண்டர்கள் மத்தியில் மோடி உரையாற்றுகிறார்.

விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்து கொண்டு, சென்னை தியாகராய நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு மோடி வருகிறார். அங்கு மாநில, மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

இதற்காக தேசிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பல்வேறு அணி தலைவர்கள் என மொத்தம் 122 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கு பாஜ மூத்த தலைவர் அருண்ஷோரி எழுதிய புத்தகத்தை அவர் வெளியிடுகிறார். விழா முடிந்தவுடன் இரவு 9 மணிக்கு தனி விமானத்தில் மோடி குஜராத் புறப்பட்டு செல்கிறார்.

நரேந்திர மோடி சென்னை வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் சென்னை விமான நிலையத்தில் வந்ததில் இருந்து பாஜ கட்சி அலுவலகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை, அவர் செல்லும் வழியெங்கும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பணியில் சுமார் 5 ஆயிரம் போலீசார் நேற்று இரவு முதல் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மேற்பார்வையில் 4 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை நகர் முழுவதும் இன்று காலை முதல் வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தை சுற்றியுள்ள தெருக்களில் போலீஸ் கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment