Saturday, October 12, 2013
இலங்கை::தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமேயில்லை. மாறாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதன் மூலமே தீர்வு என்பது சாத்தியமாகும் என்று அமைச்சரும் முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
உலகில் இதுபோன்ற உள்நாட்டு பிரச்சினைகள் நிலவிய நாடுகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு மேடையில் கூடி பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காணப்பட்டுள்ளது. தனித்து இரண்டு தரப்புக்கள் பேச்சு நடத்தித் தீர்வு எட்டப்படுவது சாத்தியமற்றதாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தகுதியான இடம் பாராளுமன்றத் தெரிவுக்குழு மட்டுமேயாகும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகிக்க மாட்டோம் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் திஸ்ஸ விதாரண இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் ஒன்றிணைந்து வேலை செய்து பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு சிறந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.
ஜனாதிபதி முன்னிலையில் வட மாகாண முதலமைச்சர் பதவியேற்பதற்கு எடுத்த தீர்மானமே ஒரு ஆரோக்கியமான சூழலுக்கான ஆரம்பமாக அமைந்துள்ளது. எனவே இரண்டு தரப்பினரும் இந்த சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முன்வரவேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக வட மாகாண அரசு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதன் மூலம் வட மாகாணத்தை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வதற்கு உதவியாக அமையும்.
இதேவேளை தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த களமாக அமையும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக அமைந்துள்ளது.
உண்மையில் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டுமாயின் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.
காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவதில் அர்த்தம் இல்லை. அது தகுதியான விடயமாக அமையாது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வருவதன் ஊடாகவே சாத்தியமான தீர்வை நோக்கி நகரலாம்.
உலகில் இதுபோன்ற பிரச்சினைகள் காணப்பட்ட நாடுகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வுகளும் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. மாறாக இரண்டு தரப்புக்கள் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளவேண்டுமே தவிர அரசாங்கத்துடன் தனித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுப்பதில் அர்த்தம் இல்லை என்பதனை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கும் வகையிலான பிரதிநிதிகள் உள்ளனர். எனவே தெரிவுக்குழுவில் அநீதி ஏற்படும் என்று கூட்டமைப்பு சிந்திக்கவேண்டியதில்லை என்றார்.

No comments:
Post a Comment