Pages

Thursday, October 17, 2013

இலங்கையில் மாகாணங்களை இணைப்பதற்கான சட்டங்களோ, அதிகாரங்களோ மாகாண சபைக்கு கிடையாது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எண்ணம் ஒருபோதும் ஈடேறப் போவதில்லை: ரில்வின் சில்வா!

Thursday, October 17, 2013
இலங்கை::இலங்கையில் மாகாணங்களை இணைப்பதற்கான சட்டங்களோ, அதிகாரங்களோ மாகாண சபைக்கு கிடையாது. எனவே, இந்தியாவின் தேவைக்காக வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எண்ணம் ஒருபோதும் ஈடேறப் போவதில்லை என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசோடு இணக்கப்பாட்டுடன் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் எதிர்ப்பதுபோல் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ரில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும், வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. மாறாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை அதிகரித்து, அதன் மூலம் அரசியல் குளிர் காயும் நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றார்.

மக்களுக்கு வாழ்வதற்கு வீடுகள், அடிப்படை வசதிகள், தொழிலில்லாப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினையென மக்கள் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர்.

இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வடக்கையும் கிழக்கையும் இணைக்க முயற்சிக்கின்றனர். மீண்டும் பிரிவினைவாதத்திற்கு தூபமிடுகின்றனர். இலங்கையில் எந்தவொரு மாகாணங்களையும் இணைக்கும் சட்டங்களோ, அல்லது அதிகாரங்களோ மாகாண சபைகளுக்கு கிடையாது.

வடக்கு, கிழக்கு வளங்களை இந்தியாவிற்கு தாரைவார்ப்பதற்காகவே கூட்டமைப்பு செயற்படுகிறதே தவிர, தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக எதனையும் அவர்கள் மேற்கொள்வதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அமைச்சுப் பதவிகளுக்காக குடுமிப்பிடிச் சண்டை பிடிக்கின்றது. இவ்வாறானவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகின்றார்கள் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

No comments:

Post a Comment