Monday, October,14, 2013
இலங்கை::பொதுநலவாய உச்சி மாநாட்டை நடத்துவதற்கு அரசாங்கமும் தடுப்பதற்கு புலிகள் அதரவு தமிழ் தீவிரவாத சக்திகளும் முயற்சிக்கின்றன என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்குள் இரண்டு அரசாங்கங்களை உருவாக்கவே சர்வதேச சக்திகள் செயற்படுகின்றன. அரசாங்கத்தில் தீவிரவாதக் குழுவுக்கு கட்சி அந்தஸ்து கொடுத்தமையே இதற்குக் காரணம் எனவும் அவ்வியக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில்:
யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கில் உள்ள புலிகள் அதரவு தீவிரவாதக் குழுவான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கட்சி அந்தஸ்தைக் கொடுத்தமையின் விளைவாகவே இன்று அரசாங்கமும் நாடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேச நாடுகளின் பேச்சைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியமையே அரசாங்கம் செய்த முட்டாள் தனமாகும். இதை இன்று வரை அரசாங்கம் புரிந்து கொள்ளாதுள்ளமை வேடிக்கையாகவே உள்ளது.
பொதுநலவாய உச்சி மாநாட்டை நடத்துவதனால் இலங்கைக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. இதில் கலந்து கொள்ளும் நாடுகளில் அதிகமான நாடுகள் இலங்கைக்கு எதிராகவே கருத்துத் தெரிவிக்கும். எனவே இம்மாநாடு தொடர்பில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் வடக்கு மக்களை வைத்தே காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. யுத்தத்தையும் உயிரிழப்புகளையும் காரணம் காட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளது. அதே போல் சர்வதேச சக்தியின் உதவியுடன் வடக்கு கிழக்கை இணைத்து தனி நாடாக்க விக்கினேஸ்வரன், சம்பந்தன் போன்றோர் முயற்சித்தும் வருகின்றனர்.
இவ்வனைத்து பிரச்சினைகளையும் தூண்டி விட்டு நல்லவர்களாக கூட்ட மைப்பினர் நாடகமாடுகின்றனர் எனவும் குணதாச அமரசேகர
தெரிவித்தார்.

No comments:
Post a Comment