Pages

Sunday, October 20, 2013

அமெரிக்க கப்பலுக்கு டீசல் வழங்கிய 5 பேர் அதிரடி கைது!

Sunday, October 20, 2013
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ‘சீமேன் ஒகியா‘‘ என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் 11ம் தேதி இரவு மடக்கிப் பிடித்தனர். துறைமுகம் 2வது தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்தக் கப்பல் மீது இந்திய எல்லைக்குள் அத்துமீறி சட்டவிரோதமாக 2 ஆயிரம் லிட்டர் டீசல் வாங்கியது, ஆவணங்கள் இல்லாமல் ஆயுதங்கள் வைத்திருந்ததாக கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மாலுமிகள் மற்றும் செக்யூரிட்டிகள் உள்ளிட்ட 33 பேரை கைது செய்தனர். அவர்கள் பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
கப்பலின் கேப்டன் டட்னிக் வாலன்டைன், தலைமை இன்ஜினியர் ட்ரிக்கோ வாலரின் ஆகியோர் மட்டும் பராமரிப்பு பணிக்காக கப்பலில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று மதியம் 1 மணியளவில் கியூ பிரிவு போலீசார் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் கப்பலில் சோதனை நடத்திய போது, திடீரென இன்ஜினியர் ட்ரிக்கோ வாலரின் வேகமாக கப்பலின் மேல் பகுதிக்கு சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து டட்னிக் வாலன்டைன், ட்ரிக்கோ வாலரினை கைது செய்தனர். அவர்களும் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், அமெரிக்க கப்பலுக்கு டீசல் சப்ளை செய்ததாக விஜய், அவரது உதவியாளர் முருகேசன், லோடுமேன் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த செல்லம், டீசல் வாங்கிய ரஞ்சித், விஜய் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் விஜய் (35), தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் 2 ஆயிரம் லிட்டர் டீசல் வாங்கியுள்ளார். அட்வன் போர்டின் ஏஜென்டான கொச்சியைச் சேர்ந்த சாக்கோ தாமஸ் கொடுத்த வங்கி மூலம் பரிமாற்றம் செய்த ரூ.1 லட்சத்தை பெற்றுக் கொண்டு டீசலை வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது.டீசலை 10 பேரல்களில் அடைத்து தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்த விஜய் (28), ரஞ்சித் (34) ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகில் ஏற்றி இந்திய கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சீமென்கார்டு ஒஹியா கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கு முருகேசன் (35), செல்லம் (38) உதவி செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக சென்னை மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலரை தேடி வருகின்றனர். அட்வன்போர்டு ஏஜென்டான சாக்கோ தாமஸின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment