Pages

Tuesday, October 29, 2013

இலங்கை காமென்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர்சிக்கினர்!

Tuesday, October 29, 2013
சென்னை::மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களில் நேற்று நள்ளிரவு மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டுகள் வீசப்பட்டதா என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் அடுத்த மாதம் காமென்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தி, தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் மற்றும் தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று உறுதியாக கூற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மாநாட்டை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள், மத்திய அரசை கண்டித்து மெரினா கடற்கரையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி துறை அலுவலகம் சாஸ்திரி பவன், அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் மற்றும் அதையொட்டியுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம், ராயப்பேட்டையில் பிஎப் அலுவலகம் உள்பட 5 மத்திய அரசு அலுவலகங்களுக்கு அதிகாலையில் பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சசிக்குமார், வாசு, சங்கர், பொற்செல்வன், வேலு, அப்பு, ரஞ்சித்குமார், பழனி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில், மயிலாப்பூர் கச்சேரி சாலையில் அமைந்துள்ள காவல் நிலையம் அருகே இயங்கி வரும் தபால் நிலையத்தில், நேற்று நள்ளிரவு 12.45 மணி அளவில் பயங்கர வெடி சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. நள்ளிரவில் பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் தபால் நிலைய வளாகத்துக்குள் புகுந்து, கட்டிட ஜன்னல்களை திறந்து தபால் நிலைய அறைக்குள் சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மொத்தம் 7 குண்டுகள் வீசியதில் 4 குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளன. 

நள்ளிரவு என்பதால் பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நடந்த போது, செக்யூரிட்டிகள் யாரும் இல்லாததால் மர்ம நபர்கள் தைரியமாக உள்ளே புகுந்து குண்டுகளை வீசியுள்ளனர். குண்டு வெடித்து சிதறியதில் அங்கிருந்த டேபிள், சேர், ஏசி ஆகியவை தீப்பற்றி எரியத் தொடங்கின. குபுகுபுவென புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தபால் அலுவலகத்துக்குள் நுழைந்து போலீசார் பார்த்தபோதுதான் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் அங்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். அப்போது வெடிக்காத பெட்ரோல் குண்டுகளை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினர்.

இதற்கிடையே, மயிலாப்பூர் தபால் நிலையத்தில் குண்டுகள் வீசிய அதே மர்ம கும்பல், மந்தைவெளி ஆர்.கே.மடம் சாலையில் உள்ள தபால் நிலையத்திலும் 8 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இந்த குண்டுகள் அனைத்தும் தபால் நிலைய வளாகத்திலே விழுந்து வெடித்ததால் கட்டிடங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நள்ளிரவில் தபால் நிலையங்களை குறி வைத்து மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டுகளை வீசியிருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். மயிலாப்பூர் துணை கமிஷனர் லட்சுமி, இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் வழக்கு பதிந்து விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் பெட்ரோல் குண்டுகளை வீசியது காமென்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ் அமைப்புகளை சேர்ந்த சிலர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தீவிர விசாரணைக்கு பிறகு திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த நிர்வாகி உமாபதி உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உமாபதி கைது செய்யப்பட்டார். 6 பேரை தேடி வருகின்றனர். போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், இலங்கையில் காமென்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தபால் நிலையங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இன்று மாலைக்குள் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment