Pages

Tuesday, October 15, 2013

பாய்லின் புயல் தாக்கி ஒடிசாவில் ரூ.2,400 கோடி பயிர் சேதம்!

Tuesday,15, October, 2013
கோபால்பூர்::ஒடிசாவை தாக்கிய பாய்லின் புயல் அம்மாநிலத்தில் நாசத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சனிக் கிழமை இரவில் துவங்கி நேற்று முன்தினம் காலை வரை வீசிய பயங்கர புயல் காற்றால் 2,400 கோடி மதிப்புள்ள பயிர்கள் அழிந்து நாசமாயின. 9 லட்சம் பேர் பலவித இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். எனினும் 200 கி.மீ. வேகத்திற்கு மேல் இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட பாய்லின் புயல் கருணை கூர்ந்து 100 கி.மீ. வேகத்தில் தாக்கியதால் ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் தப்பின.

வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரமாகி புயலாக உருவெடுத்தது. பாய்லின் என பெயர் சூட்டப்பட்ட அந்த பயங்கர புயல் கடந்த சனிக்கிழமை இரவு ஓடிசா மற்றும் ஆந்திரா கடற்கரைகளை தாக்கும் என்று கணிக்கப்பட்டது. அடிக்கடி புயலின் சீற்றத்திற்கு இலக்காகும் ஒடிசா மாநிலத்தில் 1999 ல் வீசிய கோரப் புயலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்ததால் பாய்லின் புயல் அம்மாநிலத்தில் பயங்கர பீதியை ஏற்படுத்தி இருந்தது.

சனிக்கிழமை இரவுதான் தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து இருந்ததால் கடலோர மாவட்டங்களில் கடலுக்கு அருகில் குடியிருந்த மீனவர்கள் உட்பட 4 லட்சம் பேர் கடந்த 3 நாட்களாக அப்புறப்படுத்தப்பட்டனர். பலத்த காற்றும் வீசியதால் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு அவசர கால நிலைமை அமல்படுத்தப்பட்டிருந்தது. எதிர்பார்த்தபடியே பாய்லின் புயல் தன் தாக்குதலை துவக்கியது. அசுர வேகத்தில் வீசிய காற்றால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் பெயர்ந்து எறியப்பட்டன. மின் கம்பங்கள், மொபைல் கோபுரங்கள், காற்றில் தூசி போல அடித்து செல்லப்பட்டன. 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90, 100 கி.மீ. வேகத்தில் தான் காற்று வீசியது. இதனால் கடலோர பகுதிகள் சின்னாபின்னமாயின.

பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல், கோதுமை பயிர்கள் மழை நீரில் மூழ்கின. நேற்று முன்தினம் முதற்கட்ட மதிப்பீட்டில் ஒடிசாவில் மட்டும் ரூ. 2,400 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முற்றிலும் அழிந்து உள்ளதாக கூறப்படுகிறது. மழை மற்றும் வெள்ளம், புயல் காற்று மரங்கள் விழுந்ததால் பாதிப்பு என ஒடிசாவின் 12 மாவட்டங்களில் 15 ஆயிரம் கிராமங்களில் 9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். புயலால் இறந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவுதான் என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

எனினும் மின்சாரம் இல்லாதது, தகவல் தொடர்பு வசதிகள் துண்டிப்பு போன்ற பாதிப்பு அப்பகுதி மக்களை மிகுந்த அவதிக்கு உள்ளாக்கியது. 10 மணி நேரத்திற்கும் மேலாக பயங்கர பாதிப்பை ஏற்படுத்தியிருந்த பாய்லின் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் பலவீனமடைந்து ஒடிசா வாண்வெளியை விட்டு வெளியேறி வடக்கு பகுதி நோக்கி நகர்ந்து மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அங்கேயே நிலை கொண்டது.

பாய்லின் புயலின் கண் மையம் கொண்டிருந்த ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது. அங்கு இயல்பு நிலை திரும்ப இன்னும் பல வாரங்கள் ஆகும் என கூறப்பட்டு உள்ளது. அது போல் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் ஸ்ரீகாகுளம் கடும் பாதிப்பை சந்தித்தது. அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக இட்சாபுரம் என்ற இடத்தில் 19.8 செ.மீ. மழை பெய்தது. பொதுவாக ஆந்திராவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அம்மாநிலத்தின் பல நகரங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருந்தனர். சாலையில் சரிந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 2 இடங்களில் வெள்ள நீரில் சூழப்பட்டு உயிரை காப்பாற்ற போராடிய 110 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஒடிசாவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்த பாய்லின் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் பலத்த மழையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் முதல் பாய்லின் புயலால் புதிய அபாயம் தொற்றிக் கொண்டதால் பீகாரின் பல மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பலத்த காற்றால் மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவின் துறைமுகத்திற்கு வெளியே ஆழ்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.வி.பிராங்கோ என்ற இரும்புத்தாது சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. அதில் இருந்த சீனர்கள், இந்தோனேசியவர்கள் படகு மூலம் உயிர் தப்பி உள்ளனர். பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, கொல்கத்தா வழித்தடத்தில் ஒடிசா பாதையில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment