Pages

Thursday, October 17, 2013

2014 - பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும்: கருத்துக் கணிப்பு தகவல்!

Thursday, October 17, 2013
புதுடெல்லி::2014-பாராளுமன்ற தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது.

இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளின்படி, 2009 தேர்தலில் 259 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2014 தேர்தலில் 117 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பது தெரிய வந்துள்ளது.

2009 தேர்தலில் 159 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014 தேர்தலில் 186 இடங்களை கைப்பற்றும்.

2009ல் 206 எம்.பி.க்களை தனித்துப் பெற்ற காங்கிரஸ் கட்சி 2014 தேர்தலில் வெறும் 102 இடங்களையே பெறும்.

அதே சமயம் 2009 தேர்தலில் தனித்து 116 இடங்களை பெற்ற பா.ஜ.க. 2014 தேர்தலில் 162 இடங்களில் வெற்றி பெறும்.

ஒட்டுமொத்த ஓட்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 35 சதவீதத்தையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 27 சதவீதத்தையும், மாநில கட்சிகள் 38 சதவீதத்தையும் பெறும் என தெரிகிறது.

இவ்வகையில் மத்தியில் ஆட்சி அமைக்கும் முடிவில் மாநில கட்சிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 31 இடங்களையும், அ.தி.மு.க. 28 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 25 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 23 இடங்களையும், ராஷ்டிரிய ஜனதா தளம் 14 இடங்களையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் 13 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 9 இடங்களையும் கைப்பற்றும் என தெரிகிறது.

தமிழ்நாட்டில் தற்போது 18 ஆகவுள்ள தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 5 ஆக குறையும் எனவும் இந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment