Thursday, October 10, 2013

2013 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைக்கு 30ஆம் திகதி வரை கால அவகாசம்!

Thursday, October 10, 2013
இலங்கை::2013 ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர்ப்பட்டியலுக்கான விண்ணப்பம் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவடைவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
 
இந்த பெயர்ப்பட்டியல்கள் தற்போது தேர்தல்கள் செயலகம், பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
 
அவற்றில் புதிதாக உள்ளடக்கப்படவுள்ள பெயர்கள் மற்றும் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இருந்து நீக்கப்படும் பெயர்களின் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலகம், கிராம உத்தியோகத்தர் அலுவலகம், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிடுகின்றார்.
 
இந்தக் காலப்பகுதியில் உரிய தகுதியிருந்தும், 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது அறிந்தால், இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தமது பெயர் உள்ளடக்கப்பட வேண்டிய மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
அதேபோன்று தகுதியற்ற வாக்களார் ஒருவரின் பெயர் பட்டியலில் உள்ளடக்குவதற்கு பிரேரிக்கப்பட்டிருந்தால், அதற்கான ஆட்சேபனையை தெரிவிக்கக்கூடிய விண்ணப்பங்களைப் பெற்று அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க முடியும் எனவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
 
விண்ணப்பம் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல்களை தயாரிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
 
டிசம்பர் 31 ஆம் திகதி இந்த விடயங்களை உறுதி செய்ய எண்ணியுள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment