Tuesday, October 29, 2013

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டை தாக்கிய சூறாவளி புயலில், இருவர் பலியாகினர்; 130 விமானங்கள் ரத்து!

Tuesday, October 29, 2013
லண்டன்::பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டை தாக்கிய சூறாவளி புயலில், இருவர் பலியாகினர்; 130 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
 
பிரிட்டன் மற்றும் பிரான்சை, "செயின்ட் ஜுட்' என்ற புயல் தாக்கியது. நேற்று முன்தினம், 160 கி.மீ., வேகத்தில் வீசிய இந்த புயலால், லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய, 130 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன;
 
ரயில் மற்றும் படகு சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. லண்டனின், தென் கிழக்கு பகுதியில், மரம் விழுந்ததில், இருவர் பலியாயினர்.
லண்டன் சாலைகளில் மரங்களும், மின் கம்பங்களும் விழுந்துள்ளதால், நேற்று காலை, நெரிசல் நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த புயலால், பிரான்சும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்குள்ள சுரங்க ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
 
காற்றில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததால், வட மேற்கு பிரான்சில் பெரும்பாலான வீடுகள் இருளில் மூழ்கின. "புயலால் உண்மையாகவே பாதிப்பு ஏற்பட்டிருந்தாலொழிய, சிறிய பிரச்னைகளுக்கெல்லாம், "அவசர தொலைபேசியில் அழைக்காதீர்கள் 'என, பிரிட்டன் போலீசார், மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment