Pages

Monday, September 16, 2013

பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, "துக்ளக்' ஆசிரியர் சோ திடீர் சந்திப்பு!

Monday, September 16, 2013
சென்னை::பா.ஜ., பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, "துக்ளக்' ஆசிரியர் சோ சந்தித்து, 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா, நேற்று காலை, 11:00 மணிக்கு மரியாதை செலுத்தி விட்டு, "அம்மா குடிநீர்' திட்டத்தை துவக்குவதற்காக, தலைமைச் செயலகத்திற்கு, 11:10 மணிக்கு வந்தார். தொடர்ந்து, திட்டம் துவக்கி வைக்கப்பட்ட நிலையில், பகல், 11:55 மணிக்கு, "துக்ளக்' ஆசிரியர் சோ, தலைமைச் செயலகத்திற்கு வந்தார். பகல், 12:00 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதாவை, அவர், சந்தித்தார். பகல், 12:35 மணி வரை அதாவது, 35 நிமிடங்கள் அவர்கள் சந்திப்பு நீடித்தது. பா.ஜ., சார்பில், பிரதமர் வேட்பாளராக, அக்கட்சியின், பிரசாரக்குழு தலைவர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட அரசியல் நிகழ்வுகள் குறித்து, இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
 
மேலும், பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை முதல்வர் ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, நேற்று, சோ உடன் இருந்த நிலையில், மோடியுடன் போனில் முதல்வர் பேசியதாகவும், அப்போது, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கும், மோடியின் பிறந்தநாள் நாளை (17ம் தேதி) வருவதால், அதற்கு, "அட்வான்ஸ்' பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தவிர, அத்வானி குறித்தும், டில்லி அரசியல் மற்றும் பார்லிமென்ட் தேர்தல் குறித்தும், இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, 12:40 மணிக்கு சோ, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஜெயலலிதாவும் அரசு அலுவல்களை முடித்துவிட்டு, 2:00 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் இருந்து போயஸ் தோட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment