Monday, June 3, 2013

கருணாநிதி 90-வது பிறந்தநாள் கோலாகல கொண்டாட்டம்!

Monday, June 03, 2013
சென்னை:திமுக தலைவர் கருணாநிதி, தனது 90-வது பிறந்தநாளை இன்று குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார். பெரியார், அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதிக்கு வாழ்த்து சொல்வதற்காக அண்ணா அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 90-வது பிறந்த நாள். இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிஐடி காலனி வீட்டில் கருணாநிதி மரக்கன்று நட்டார். இந்நிகழ்ச்சியில் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., சற்குண பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கோபாலபுரம் வீட்டுக்கு சென்ற கருணாநிதி, பெற்றோர் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார். காலை 7.45 மணிக்கு குடும்பத்தினருடன் வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தயாளு அம்மாள், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம், செல்வி, அமிர்தம், மு.க.தமிழரசு, சன் குழும தலைவர் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் எம்.பி. மற்றும் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காலை 8.30 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு சென்ற கருணாநிதி, அங்கு மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அங்கிருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதிக்கு தி.க. தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் பெரியார் நினைவிடத்தில் கருணாநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து காலை 10.10 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார் கருணாநிதி. அவருக்கு மேள தாளம் முழங்க திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்குக்கு சென்ற கருணாநிதி, அங்கு வைக்கப்பட்டிருந்த தேர்தல் நிதி உண்டியலில் பணம் போட்டார். அவரைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் பணம் போட்டார். கருணாநிதிக்கு வாழ்த்து சொல்ல தமிழகம் முழுவதும் இருந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அறிவாலயத்தில் குவிந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேடையில் அமர்ந்தபடி தொண்டர்களின் வாழ்த்துக்களை கருணாநிதி ஏற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், முன்னாள் சபாநாயகர்கள் ஆவுடையப்பன், சேடப்பட்டி முத்தையா, முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, ஏ.கே.எஸ்.விஜயன், ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரைசாமி, பொன்.முத்துராமலிங்கம், வேலுச்சாமி, கே.கே.நகர் பகுதி செயலாளர் தனசேகரன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, அம்பத்தூர் நகர செயலாளர் ஜோசப் சாமுவேல் உள்பட பலர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொமுச பேரவை தலைவர் பேரூர் நடராஜன், பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் தேர்தல் நிதியாக ரூ.5 லட்சத்தை கருணாநிதியிடம் வழங்கினர். திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தொண்டர், ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கினார். கருணாநிதிக்கு செவ்வாழை குலை, பழ வகைகள், சால்வை, ரூபாய் நோட்டு மாலை உள்பட பல்வேறு பரிசுப் பொருட்களை தொண்டர்கள் வழங்கினர். உண்டியலில் தேர்தல் நிதியும் செலுத்தினர். தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் இன்று மாலை 6 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.

கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகிக்கிறார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், தி.க. தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார். கூட்டத்தில் திமுக முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று காலை போனில் கருணாநிதியை தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். தமிழக கவர்னர் ரோசய்யா, பூங்கொத்து மற்றும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் போனில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment