Wednesday, May 8, 2013

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பிளான் சிறிலங்கா எனும் அரசசார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் சந்திப்பு!


Wednesday, May 08, 2013
இலங்கை::அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பிளான் சிறிலங்கா எனும் அரசசார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்றைய தினம்  இடம்பெற்றது.

இதன்போது பிளான் சிறிலங்கா எனும் மேற்படி அரச சார்பற்ற நிறுவனம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து வடபகுதியில் மேற்கொள்ளவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதில் சிறுவர்களுக்கான போசாக்கு மற்றும் சத்துணவுத்திட்டத்தை பனைசார்ந்த உணவுப்  பொருட்களினூடாக மேம்படுத்துவதுடன், இளைஞர்களது திறன்களை விருத்தி செய்யும் முகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், குறித்த அரசசார்பற்ற நிறுவனம் அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய வடிவமைப்பு நிலையம், தேசிய அருங்கலைகள் பேரவை, ஆகியவற்றுடன் இணைந்து கைத்தொழில் மற்றும் கைப்பணித்துறைகளை மேம்படுத்துவதுடன் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இதனிடையே குளங்களிலுள்ள நீர் அதிகளவு வெப்ப காலங்களில் ஆவியாகும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் பட்சத்தில் அவ்வாறு நீர் ஆவியாதலை தடுக்கும் முகமாக முன்னெடுக்கக் கூடிய பாதுகாப்பு பொறிமுறைகள் குறித்தும்; ஆராயப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், அமைச்சின் கீழான நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன், இதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தக் கூடிய வகையில் அமையப் பெறவேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment