Pages

Thursday, May 16, 2013

சேது சமுத்திர திட்டத்துக்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற வேண்டும்: திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள்!

Thursday, May 16, 2013
சென்னை::சேதுசமுத்திர திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எழுச்சி நாள் பொதுக்கூட் டம் திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. வடசென்னையில் தங்கசாலையில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார். மணிவேலன் வரவேற்றார்.கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:மத்தியிலே உள்ள அரசு கொடுக்கிற திட்டங்களை எல்லாம் தமிழக அரசு வேண்டாம் என்று மறுக்கிறது. மதுரவாயல் & சென்னை துறைமுகம் வரை ஒரு சாலை அமைக்க மத்திய அரசு ரூ.1,400 கோடியை ஒதுக்கியது. இதற்கான தொடக்க விழாவை எனது தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இப்போது, அந்த திட்டமே தேவை இல்லை என்றும், அறிவித்தது மத்திய அரசு என்பதற்காக அல்ல, அதை யார் வலியுறுத்தி பெற்றார்கள் என்பதற்காக அந்த திட்டத்தை கிடப்பில் போடுவோம் என்று போட்டுள்ளனர். இப்படி பல ஆயிரம் கோடியிலான திட்டங்களை மத்திய அரசு அறிவித்தாலும், திமுக வலியுறுத்தியும் கூட இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றினால் மத்திய அரசுக்கு பெயர் வந்துவிடும் என்பதற்காக அதை புறக்கணிக்கும் அரசாக இருப்பது ஜெயலலிதா அரசு. இதுபோல்தான் சேது சமுத்திர திட்ட நிலையும்.

இது நிறைவேறினால் யாருக்கு என்ன பயன். அந்த திட்டம் நிறைவேறினால் சுற்றுப்பகுதியில் உள்ள பல்லாயிரகணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை வாய்ப்பு பெருகினால் அது மாநில அரசுக்குத்தான் பெருமை. அப்படி பெயர் வாங்கி தரக்கூடிய இந்த மிகப் பெரிய திட்டத்தை திமுக தொடங்கியதால் நாங்கள் தொடரமாட்டோம் என்பது வீணான கனவு. மக்களை ஏமாற்றுவதற்காக மத்திய அரசை குறை சொல்லி நடத்தி காட்டுகிற போலி நாடகம். அதை நம்பாமல் திமுக சார்பில் எடுத்து சொல்லுகிற கருத்துக்களை ஆராய்ந்து உங்கள் ஆதரவை யாருக்கு தர வேண்டுமோ அவர்களுக்கு தர வேண்டும். அப்படி எடுத்து கூறியும் கூட அதை புறக்கணித்துவிட்டு திமுக கருத்துக்கு மாறாக அதிமுகவுக்கு வாக்களித்தீர்கள். இப்போது அதன் விளைவு என்ன? இருண்ட தமிழகமாக உள்ளது. தமிழகத்தை உயர்ந்த மாநிலமாக ஆக்க என்ன செய்துள்ளார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். நீங்கள் நல்ல முடிவுக்கு வர வேண்டும். எப்போது இந்த அரசு மாறும். எப்போது இந்த அரசுக்கு விடை கொடுத்து அனுப்பி வைப்பீர்கள். அதிமுக அரசுக்கு விடை கொடுக்கும் நாள் விரைவில் அமைய வேண்டும். இன்னும் 3 ஆண்டுகள் காலம் இந்த அரசுக்கு ஆயுள் இருக்கிறது. அதற்கு முன்பே அதிமுக அரசுக்கு விடை கொடுக்க செய்ய வேண்டும். சேது சமுத்திர திட்டத்துக்கு முதலில் குரல் கொடுத்தவர் அண்ணா. தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றும் இந்த திட்டத்தை வலியுறுத்தி பெற மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக, மதிமுக, பாமக கட்சிகள் தவறிவிட்டன. எனவே இந்த திட்டத்தை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்ற புதியதாக அமையும் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறியது அதிமுகதான். 2004 நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் இதை கூறியுள்ளனர்.

அந்த திட்டத்தை நாம் கவனிக்கவில்லை என்று திமுக மீது குற்றம் சாட்டியவர்கள், இன்று இந்த திட்டம் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் சென்று மனு கொடுத்துள்ளனர்.9.3.2001ல் பா.ஜ. ஆட்சியில் தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித் தார். அதையடுத்து இந்த திட்டத்தின் ஆய்வு பொறுப்பு ‘நீரி‘ அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. ‘ஆதாம் பாலம்‘ கடல் பகுதி மணல் திட்டுக்களால் ஆனது. அங்கு எந்த கட்டுமானமும் இல்லை என்று அந்த அமைப்பு தெளிவுபடுத்தியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த  அருண்ஜெட்லி, சத்ருகன் சின்கா போன்றவர்கள் ஆதாம் பாலம் வழித்தடம் குறித்த ஆய்வு முடிவை  ஏற்றுக் கொண்டனர். இந்த திட்டத்தை உருவாக்கத் தொடங்கிய டி.ஆர்.பாலு பல அறிக்கைகள் மூலம் இவற்றை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 29.4.13ல் உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்து சேது சமுத்திர திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ராமர் பாலத்தை சேதப்படுத்தக் கூடாது, என்று இந்த திட்டத்தை எதிர்த்துள்ளது. ஆனால் 2001 தேர்தல் அறிக்கையில் ஜெயல லிதா கூறியது என்னவென்றால் ‘கப்பல்கள் இப்போது இலங்கையை சுற்றிப் போகவேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக அமைந்ததுதான் சேது திட்டம். எனவே இந்த திட்டத்தின் மூலம் பயண நேரம், பயண செலவு குறையும்‘ என்றார்.

இந்த திட்டத்தின் பலனாக கடலில் பயண நேரம் குறைவதுடன் வியாபாரம் தழைக்கும், லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கருணாநிதி சொன்னார் எனவே இது கிடையாது. கருணாநிதி சொன்னால் நிறைவேற்ற மாட்டோம் என்று கூறுகின்றனர். கருணாநிதி கட்டியதால் சட்டப் பேரவை மாளிகையை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என்றார்கள். பரவாயில்லை. அது நூறு அல்லது இருநூறு பேர் பிரச்னை. ஆனால் சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கானோர் பிரச்னை. அவர்கள் தலையில் கை வைக்காதீர்கள் அம்மா என்று ஜெயலலிதாவை நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் தமிழர்கள் வாழ்வு இருள் மயமாகும். எனவே இதை தடுக்காதீர்கள். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை  வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள். உச்ச நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறுங்கள் என்று கூறுவதற்காகத்தான் இந்த கூட்டம். அப்படி வாபஸ் பெறாவிட்டால் தமிழக மக்களின் வாழ்வு பாழாகும். வாணிபம் குறையும். அந்த அநியாயத்தை செய்ய துணை போகவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் சொல்வதை கேட்கவா போகிறார்கள். கேட்கமாட்டார்கள். ஆனால் கேட்கக் கூடிய காலம் வரும். அந்த காலத்தை உருவாக்குங்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேசியதாவது:2004ம் ஆண்டு தமிழ் நாட்டு மக்கள் 40க்கு 40 என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து 40 எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பினீர்கள். அப்போது, கூட்டணியின் முதல் கூட்டம் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது, கருணாநிதியை பார்த்து உங்களுக்கு ஏதாவது கோரிக்கை இருக்கிறதா என்று சோனியாகாந்தி கேட்டார். அதற்கு கருணாநிதி 3 கருத்துக்களை முன்வைத்தார். ஒன்று, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து. அதை நிறைவேற்றினார். சொன்னார் செய்து முடித்தார். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னார். அதையும் நிறைவேற்றினார். அடுத்ததாக, 150 ஆண்டுகால கனவு திட்டமான சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னார். அப்போது துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, அந்த திட்டத்தை செயல்படுத்தினார். பாதி பணிகள் முடிந்துவிட்டது. ராமாயணம் கதையை சொல்லி, ராமர் பாலம் கட்டினார் என்று சொல்லி திட்டத்தை நிறுத்திவிட்டனர்.மீண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைய வேண்டும். அமைந்தால்தான், மீண்டும் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்லும். சேது சமுத்திர திட்டம் அண்ணாவின் கனவு திட்டம். கலைஞரின் கனவு திட்டம். ஏன் எம்ஜிஆர் பெயரால், அண்ணா பெயரால் கட்சியை நடத்தும் ஜெயலலிதா அவர்களே உங்கள் தலைவர் எம்ஜிஆரே இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். ஆனால், இன்றைக்கு சேது சமுத்திர திட்டத்தை கைவிட ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். இது கொடுமையானது. தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல எம்ஜிஆருக்கு செய்கின்ற துரோகம். இவ்வாறு தயாநிதிமாறன் பேசினார்.

No comments:

Post a Comment