Pages

Friday, May 3, 2013

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி தங்கச்சிமடத்தில் சாலை மறியல்!

Friday, May 03, 2013
ராமேஸ்வரம்::இலங்கை சிறையில் உள்ள, தமிழக மீனவர்கள், 35 பேரை விடுதலை செய்ய கோரி, தங்கச்சிமடத்தில் மீனவர்கள், சாலை மறியல் செய்தனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து, ஏப்., 6ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில், 30 பேரும்; 2011 நவ., 28ல், போதை பொருட்கள் கடத்தியதாக, பொய் வழக்கில் சிக்கியுள்ள, ஐந்து மீனவர்களும்; இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள், பல போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.
இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள ஐந்து படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க கோரி, படகுகளின் உரிமையாளர்கள் ஐந்து பேர் தலைமையில், 1,000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், நேற்று, ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., லாரன்ஸ், மே 6ம் தேதி, மீனவர்களை விடுதலை செய்ய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியதை அடுத்து, மறியலை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக மீனவர் சங்க நிர்வாகிகள், 10க்கும் மேற்பட்டோர் மீது, தங்கச்சிமடம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

No comments:

Post a Comment