Pages

Saturday, May 11, 2013

கர்நாடக காங்கிரஸ் முதல்வராக சித்தராமையா தேர்வு!

Saturday, May 11, 2013
பெங்களூர்::கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டார். பெங்களூரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றார். தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி இருந்தது. இதன் பதவிக்காலம் முடிவடைந்ததும் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 224 தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் மரணமடைந்துவிட்டதால் அந்த தொகுதியில் மட்டும் வரும் 25-ம் தேதிக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. மீதமுள்ள 223 தொகுதிகளுக்கும் கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஓட்டுக்கள் கடந்த 8-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் 121 தொகுதிகளில் வெற்றிபெற்று தனி ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாரதிய ஜனதா கட்சி, மதசார்பற்ற ஜனதா கட்சிகள் தலா 40 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன. முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கியுள்ள கர்நாடக ஜனதா 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றுபெற்றுள்ளது. 
 
காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கு 3 பேர்களின் பெயர் அடிபட்டது. ஆஸ்கர் பெர்ணான்டஸ், மல்லிகார்ஜூன் கார்கே, சித்தராமையா ஆகியோர்கள் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டதாக தெரிகிறது. இறுதியில் ஆஸ்கர் பெர்ணான்டஸ் ஒதுங்கிக்கொண்டதாக தெரிகிறது. மல்லிகார்ஜூனா கார்கே முதல்வர் பதவி கோருவதில் உறுதியாக இருந்ததால் போட்டி ஏற்பட்டது. இந்தநிலையில் பெங்களூரில் நேற்று புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மேலிட பிரதிநிதிகள் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டர்.
 
புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் சித்தராமையாவுக்கு 80 வாக்குகள் கிடைத்தன. மல்லிகார்ஜூனா கார்கேவுக்கு 40 வாக்குகள் கிடைத்தன. இதனையொட்டி சித்தராமையா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சித்தராமையா முதலில் மதசார்பற்ற ஜனதாதளத்தில் இருந்தார். அந்த கட்சியில் இருந்து அவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசில் சேர்ந்தார். சிறந்த முறையில் கட்சி பணி ஆற்றியதால் கடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் அவர் சட்டசபை காங்கிரஸ் தலைவராக இருந்தார். தற்போது அவர் காங்கிரஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கர்நாடகத்தில் உள்ள வருணா சட்டமன்ற தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சித்தராமையா, கவர்னர் பரத்வாஜை சந்தித்து தம்மை ஆட்சி அமைக்க கோருவார். இன்று அல்லது நாளையோ முதல்வராக சித்தராமையா பதவி ஏற்கலாம் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment