Friday, May 10, 2013
இலங்கை::இனத் தொடர்புச் சபையொன்றை அமைப்பது தொடர்பாக தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதந்துரைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் – நோர்வே தூதுவர் கிறீடி லோச்சனிடம் தெரிவிப்பு-
இலங்கை::இனத் தொடர்புச் சபையொன்றை அமைப்பது தொடர்பாக தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதந்துரைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் – நோர்வே தூதுவர் கிறீடி லோச்சனிடம் தெரிவிப்பு-
இனங்களுக்கிடையிலான பலதரப்பட்ட விவகாரங்களை சுமூகமாக கையாள்வதற்காக இனத் தொடர்புச் சபையொன்றை அமைப்பது தொடர்பாக தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதந்துரைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீடி லோச்சன், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு புதன்கிழமை பிற்பகல் நீதியமைச்சில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்ட போது, இங்கு வாழும் சமூகத்தவர்கள் மத்தியில் அண்மைக்காலமாக அடிக்கடி ஏற்பட்டவண்ணம் இருக்கும் முறுகல் நிலையை நீக்குவதற்கு சாத்தியமான வழிவகைகள் பற்றி பேசப்பட்ட போதே இனரீதியான துருவப்படுத்தலை இயன்றவரை குறைப்பதற்கும், இன விரிசல்களை இல்லாமல் செய்வதற்கும் உதவும் விதத்திலான பொறிமுறையொன்றின் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டது.
யுத்தம் முடிவடைந்து, நாட்டில் சமாதானம் நிலவும் சூழ்நிலையில் இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் பற்றி அமைச்சர் ஹக்கீம் எடுத்துக் கூறினார்.
இவ்வுரையாடலின் போது நோர்வே கவுன்சிலர் விபெகி பிப்பி ஜி சொயேகார்ட், அமைச்சரின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்- உலக வங்கிப் பிரதிநிதிகள் சந்திப்பு!
சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்- உலக வங்கிப் பிரதிநிதிகள் சந்திப்பு- நீதி அமைச்சினால் இலங்கையில் நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் தொடர்பில் ஒரு வர்த்தக திட்டத்தை வகுப்பதற்கு உலக வங்கியால் ஆலோசகராக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள கிரஹம் மெர்ஸி, அதன் செயலாக்க சாத்தியக்கூறுகள் பற்றி அமைச்சர் ஹக்கீமிடம் விளக்கிக் கூறினார்.
ஆலோசகர் கிரஹம் மற்றும் அவருடன் வருகை தந்த உலக வங்கிப் பிரதிநிதிகள் உத்தேச நடுத்தீர்ப்பு மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், சந்தை வாய்ப்பு தொடர்பான அம்சங்கள் ஏனைய செயல்பாடுகள் என்பன பற்றி விபரித்தனர்.
நடுத்தீர்ப்பு மையத்தோடு தொடர்புடைய இதர பங்குதாரர்கள், சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரிகள் ஆகியோரையும் ஆலோசகர் கிரஹம் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பல்வேறு நாடுகளில் ஏற்படும் உள்நாட்டு நிறுவனங்களுடனான வர்த்தக, தொழில் முதலான அநேக சட்ட ரீதியான பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வை காண்பதற்கு இலங்கையில் நிறுவப்படவுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் உதவும். இதனூடாக இலங்கை அரசாங்கத்திற்கு பெருந்தொகையான அந்நியசெலாவணி வருமானமாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்துறையில் கைசேர்ந்த தலைசிறந்த சட்டத்தரணிகள் இங்கு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சருடனான சந்திப்பின் போது நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, சிரேஷ்ட உதவிச் செயலாளர் அனுஷா முனசிங்க, அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ஏ.ஆர்.எம். மன்சூர்ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.



No comments:
Post a Comment