Pages

Tuesday, May 21, 2013

கடலூருக்கு காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் வருகை: சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ; காங்., - பா.ஜ., இந்து மக்கள் கட்சி, தலைவர்கள் கண்டனம்!

Tuesday, May 21, 2013
சென்னை::காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கிற்கு, பின்புலமாக இருந்து உதவி செய்கிற இயக்கங்கள் எவை என்பதை, மத்திய, மாநில அரசுகள் புலன் விசாரணை செய்ய வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும், "யாசின் மாலிக்கை, தமிழத்தில் நுழைய அனுமதித்தது மிகவும் அபாயகரமானது' என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள்ளனர்.

ஞானதேசிகன்: 

புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படங்களை, பேனர், போஸ்டர்களில் பிரசுரிப்பது போன்ற நடவடிக்கைகள், சமீப காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்கை, கடலூருக்கு அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தவும், முயற்சி செய்துள்ளனர்.
கடலூர் கூட்டத்தை தடை செய்ய, முதல்வர் எடுத்த நடவடிக்கை சரியானது. இதை, தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது. காஷ்மீர் பிரினைவாதி யாசின் மாலிக்கிற்கு, பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு உதவிகள் இருப்பதாக, பலமுறை கைது செய்யப்பட்டவர்.
இந்தியாவின், இறையாண்மையை கேள்வி கேட்டு, காஷ்மீரத்தை துண்டாட துடிக்கிற, யாசின் மாலிக் கடலூருக்கு எப்படி வந்தார்? கூட்டம் நடத்தியவர்களுக்கும், அவருக்கும் என்ன தொடர்பு? அவரை கடலூருக்கு கூட்டி வருவதற்கு உதவி செய்த சக்தி எது? இந்த நிகழ்ச்சிக்கு, பின்புலமாக இருந்து உதவி செய்கிற இயக்கங்கள் எவை, எவை என்பதையெல்லாம், மத்திய, மாநில அரசுகள் புலன் விசாரணை செய்ய வேண்டும்.

தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்:

இலங்கை தமிழர் உரிமை காக்க நடக்கும் போராட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களில் காஷ்மீர் பிரினைவாதி, யாசின் மாலிக்கை கலந்து கொள்ளச் செய்தது, தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தலை குனியச் செய்துள்ளது.
இழக்கப்பட்ட உரிமைகளை திரும்பப் பெற, 60 ஆண்டுகளாக, இலங்கை தமிழர்கள் தமக்கு ஆதரவாக தமிழகம் உட்பட இந்தியாவின் ஒட்டுமொத்த ஆதரவையும் தான் எதிர்பார்த்தார்களே தவிர, இந்தியாவை துண்டாடத் துடிக்கும் எந்த ஒரு தீய சக்தியுடனும், அவர்கள் கைகோர்க்க முன் வரவில்லை என்பதை, யாசின் மாலிக்கின் தலைமை ஏற்கத் துடிக்கும் தமிழர்கள், புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவை துண்டாட நினைக்கும் யாசின் மாலிக் போன்றவர்களை, தமிழத்தில் நுழைய அனுமதித்தது, மிகவும் அபாயகரமானது என்பதை, தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்..

யாசின் மாலிக், சீமான் மீது நடவடிக்கை கோரி மனு!

கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில், பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய, காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் மற்றும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, டி.ஜி.பி.,யிடம், இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர், முத்து ரமேஷ்குமார் அளித்துள்ள புகார் மனு: இம்மாதம், 18ம் தேதி, கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில், இந்தியாவின் ஒருமைப் பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்திய ராணுவத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும், காஷ்மீர் பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் பேசியுள்ளார்.

இந்த யாசின் மாலிக், பயங்கரவாதியான அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட போது, இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், ஹபீஸ் சையது என்ற பயங்கரவாதியுடன், இணைந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர். இவ்வாறு பயங்கரவாதிகளுடன் கைகோர்த்து செயல்படும், யாசின் மாலிக், தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பிரிவினை சக்திகளை உருவாக்க முயற்சிக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment