Pages

Thursday, May 16, 2013

தி.மு.க. ஆட்சியில் கஜானா காலியானது: கச்சத்தீவு பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் மூலம் துரோக வரலாற்றை மூடி மறைக்கப் பார்க்கிறார் கருணாநிதி: பன்னீர்செல்வம்!

Thursday, May 16, 2013
சென்னை::கச்சத்தீவு பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் மூலம் துரோக வரலாற்றை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் என்றும், தி.மு.க. ஆட்சியில் நிர்வாகத் திறமை அழிந்து போனது என்றும், கஜானா காலியானது என்றும் தி.மு.க. மீதும், கருணாநிதி மீதும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக கண்டனங்களை தெரிவித்தார். 
 
சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான மானியக்கோரிக்கையின் மீது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-   
 
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து
தன் பொல்லாச் சிறகை  விரித்து ஆடினாற் போலா கச்சத்தீவுப் பிரச்சனையிலே தனது மூக்கை நுழைத்து தன் முகத்தில் கரிபூசிக் கொள்ளத்  துணிந்திருக்கிறார் கருணாநிதி!
 
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க  மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறாராம் கருணாநிதி!
நிமிர்ந்த நெஞ்சுரமோ  நேர்கொண்ட சிந்தனையோ - இல்லாமல்
தடைபோடுகிற திறமையோ தடுத்து நிறுத்துகின்ற தைரியமோ - இல்லாமல் அன்றைக்கு கச்சத்தீவை  தாரை வார்த்துக் கொடுத்த துரோக வரலாற்றை இன்றைக்கு வழக்குத் தொடுத்ததன் மூலம் மறைத்துவிடலாம் தமிழக மக்களை மறக்க வைத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார் கருணாநிதி.
ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பு!  13 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகிப்பு! அப்போதெல்லாம் கருணாநிதிக்கு வரவில்லை கச்சத்தீவின் நினைப்பு! 39 ஆண்டுகாலம் கும்பகர்ணத் தூக்கம் தூங்கிவிட்டு இன்றைக்கு திடீரெனக் கண் முழித்து வழக்குத் தொடுத்திருக்கிறார்! இதுநாள் வரை, ஆட்சி அதிகாரம் போய் விடுமே என்று அஞ்சி நடுநடுங்கி துஞ்சிக் கிடந்தார். பதவி பறிபோய் விடுமே என்று பயந்து பணிந்து கிடந்தார்.
 
இன்றைக்கோnull ஆட்சி அதிகாரத்தையும்,  பதவிப் பவிசையும், மக்கள் பறித்துவிட்ட காரணத்தால், எதைப் பேசினால் என்ன லாபம் என்று கணக்குப் பார்த்து கச்சத்தீவு மீது - பாசம் காட்டுகிறார் தமிழக மீனவர்கள் மீது - பரிதாபம் கொள்கிறார். ஐயோ பாவம்.
 
கடந்த 3.5.2013 அன்று சட்டமன்றப் பேரவையில் இந்திய நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டதை திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, வரலாற்றுச் சிறப்பு மிக்க - அரசினர் தீர்மானத்தை  தமிழக முதலமைச்சர் முன்மொழிந்தார்.
இது குறித்து முரசொலியில்  கட்டுரை எழுதிய கருணாநிதி, கருணாநிதியின் டெசோ அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் பேரவையில் கச்சத்தீவு பற்றி  தீர்மானம் கொண்டு வர  உசுப்பி விட்டிருக்கிறது போலும் என்று தன் முதுகை தானே  தட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்  பாவம் கருணாநிதி.
 
காட்டில் சினங் கொண்ட சிங்கம் ஒன்று மல்லுக்கு வந்த  மதங்கொண்ட யானையை ஓங்கி ஓர்அறை விட்டதாம்! அப்போது அங்கே நின்று கொண்டிருந்த எலி ஒன்று சொன்னதாம்; இந்த யானைக்கும் எனக்கும் நேற்று ஒரு சண்டை! அப்போது இந்த யானையை நான் ஓர் அறை விட்டேன்  அதைப் பார்த்துத்தான்  சிங்கம் இன்றைக்கு அந்த யானைக்கு அறை விட்டது என்று சொன்னதாம்! தடை எதுவரினும் பொடிப் பொடியாக்கி, இடர் தரும் தீயோரை எட்டித் தள்ளி, கச்சத் தீவை,  முதல்வர் மீட்டே தீருவார்,  இது உறுதி, இது சத்தியம்.
 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், சட்டமன்றங்கள், ஜனநாயக முறைகளைப் பின்பற்றி இயங்குவதற்கென,  சட்டமன்றப் பணிகள் குறித்து  தெளிவாகவும், விரிவாகவும், விளக்கப்பட்டுள்ளது.   சட்டமன்றப் பேரவையானது,  சட்டப் பேரவைத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவருவதால்,  அதன் நடைமுறைகள் குறித்து,  மாமன்றத்தில் விவாதிக்கப்படுவது இல்லை.
இதன் காரணமாகத்தான், மாநில சட்டமன்றம் குறித்த கொள்கை விளக்கக் குறிப்புகள், இப்பேரவையில் தனியாக வைக்கப்படுவதில்லை.  அதுபோல ஆளுநர் மற்றும் அமைச்சரவை குறித்த  மானியக் கோரிக்கைகளும்,  அவையில் வைக்கப்படுவதில்லை என்பதை,  மாமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சரித்திரத்தின் புகழ் மிக்க பக்கங்களில் இடம்பெற்ற, இந்த சட்டமன்றத்தில், இதற்கு முன்னர் சான்றோர்கள் பலரும் அமர்ந்திருந்தார்கள். அதேநேரம், ஜனநாயகத்தை மதிக்காத சிலரும் அமர்ந்திருக்கத்தான் செய்தார்கள். 
சட்டமன்ற ஜனநாயகத்திற்கு பெருமை சேர்த்தவர்களும், அமர்ந்திருந்தார்கள்.  சட்டமன்ற ஜனநாயகத்தைப் பாடாய் படுத்தி, அந்தப் பெருமையைக் குலைக்கின்ற வகையில் செயல்பட்டவர்களும், அமர்ந்திருந்தார்கள். 
சட்டமன்றத்தின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் முதல்வரின் மேலான ஆணையினை ஏற்று, கடந்த 30.11.2012 அன்று,  சட்டமன்ற வைரவிழா, இந்தப் பேரவை மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.  
 
சட்டமன்ற வரலாற்றுப் பதிவுகளைத் துல்லியமாக எடுத்துச் சொன்ன, அழகுமிகு புகைப்படக் கண்காட்சி, முதல்வரின் பொற்கரங்களால் துவக்கி வைக்கப்பட்டு, ஒருவார காலம் நடைபெற்றது. 
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த வைரவிழா நிகழ்ச்சிக்கு, வருவதாக ஒப்புதல் அளித்திருந்தார், இந்தியக் குடியரசுத்தலைவர்  பிரணாப் முகர்ஜி.  ஆனால், அவர் வரமாட்டார்' என்று, நினைத்தார்கள் சிலர்,  வரவிடாமல் செய்துவிடுவோம் என்று, முயற்சித்தார்கள் சிலர். 
அப்படி முயற்சி செய்தவர்களின் முகத்திலே கரியைப் பூசி,  அவர்களை எல்லாம் கலக்கத்தில் ஆழ்த்திவிட்டு , இந்திய குடியரசுத்தலைவர்- பிரணாப் முகர்ஜி,  தமிழ்நாடு சட்டமன்ற வைரவிழாவில்  கலந்து கொண்டு,  சென்னை அரசினர் தோட்டத்தில் கட்டப்படவுள்ள, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் விடுதிக்கு அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை, மனம் திறந்து பாராட்டினார். 
 
ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சட்டமன்ற வரலாற்று சிறப்பு மலரை,   தங்களது பொற்கரங்களால் வெளியிட்டு, சிறப்புச் சேர்த்தார்.
சட்டமன்றத்தின் முதல் பேரவையில் இடம் பெற்ற, ஆர்.கிருழணசாமி கோபாலர், என்.மகாலிங்கம், ஆர்.எம்.பழனியப்பன் ஆகிய மூத்த உறுப்பினர்கள், இம்மாமன்றத்திற்கு நேரில் வரவேற்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டார்கள். 
 
வைரவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாமல் போன, 91 வயதான மூத்த உறுப்பினர் டி.எம். காளியண்ணனை, முதல்வரின் விருப்பப்படி, சட்டப்பேரவைத் தலைவர்  அவரது இல்லத்திற்கே சென்று பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். 
 
இவையெல்லாம், முதல்வர், ஜனநாயக மாண்புகளை மதித்திடும் பண்பிணைப் பறைசாற்றும் சான்றுகளாகும்.
 
சட்டமன்ற ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் ஈடு இணையற்றவராக, முதலமைச்சர் ஜெயலலிதா திகழ்ந்து கொண்டிருகிறார். 
சட்டமன்ற மரபுகள் காக்கப்படுவது, முதல்வரின் ஆட்சியில்தான் சட்டமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படுவதும், முதல்வரின் ஆட்சியிலேதான் எதிர்கட்சி உறுப்பினர்களையும் பேசவைத்து அழகு பார்க்கின்ற பெருந்தன்மையான குணம்தான் எங்கள் முதல்வரின் குணம்! 
 
தே.மு.தி.க. உறுப்பினர் எல்.வெங்கடேசன்   பேசும்போது, அவருக்கு மேலும் ஐந்து நிமிடங்கள் நேரம் கொடுங்கள் என்று பரிந்துரைத்து கூடுதலாகப் பேச வைத்தார், முதல்வர். ஆனால்,  சட்டமன்ற ஜனநாயகத்தை மதிக்காமல், சட்டமன்ற மரபுகளுக்கு உரிய மரியாதை அளிக்காமல், வராண்டா வரை வந்து செல்லும் தந்தை என்றாலும் வம்பு செய்வதற்கே வந்து சென்ற மகன் ஆனாலும் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்து வைக்கும் கருத்துகளுக்கு பதில் பேசமுடியாமல், சட்டமன்றத்திற்கு வராமல் மட்டம் போட்டுவிட்டு, ஒழுங்காக பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றும் தறுதலைகளைப் போல ஊர் ஊராகச் சென்று, சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு  என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்! 
 
உண்மையில், சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை தி.மு.க.வினர் படுத்தும் பாடு என்ற தலைப்பில்தான், அவர்கள் பேச வேண்டும்.
ஏதாவது வம்பு செய்து வெளியேற வேண்டும் என்று முன்னதாகவே திட்டமிட்டு வருவது-
 
கருத்துக்கு கருத்து பேச முடியாமல் கைநீட்டிப் பேசுவது - விரல் நீட்டி மிரட்டுவது -
 
சட்டமன்றத் தலைவர் நிற்கும்போது அவர்களும் நின்று கொண்டிருப்பது-
சட்டமன்றத் தலைவர் உட்காரச் சொன்ன பிறகும் உட்காராமல் வம்பு செய்வது- சபாநாயகரின் இருக்கையைச் சூழ்ந்து நின்று  கோஷம் போடுவது- 
அவை மரபை மீறிய நாகரீகமற்ற வார்த்தைகளை அள்ளித் தெளிப்பது-என்று சட்டமன்ற மரபுகள் அனைத்தையும் மீறிச் செயல்பட்டு, சட்டமன்றத்தில் தி.மு.க.வினர் ஜனநாயகத்தைப் படுத்துகின்ற பாடு, சொல்லி மாளாது.  தி.மு.க.வினர் இப்படி நடந்து கொள்வதற்கு காரணமே, முதலமைச்சர் ஜெயலலிதாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறன் அவர்களுக்கு இல்லை.
 
முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருத்துக்கு எதிர்க் கருத்து கூறும் திறமையும் அவர்களுக்கு இல்லை.  எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல வேஷமிடும் இவர்கள் ஏதும் அறியா கைப் பிள்ளைகள் தான் என்பதை, தமிழக மக்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த 
வகுத்தலும், வல்லது அரசு எனும் வள்ளுவர் வாக்கின்படி, 
தமிழ் மக்களின் நலனுக்காக - தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக - வருவாய்க்கான திட்டங்களை இயற்றுவதிலும் - இயற்றியபடி ஈட்டுவதிலும் - ஈட்டியதைக் காப்பதிலும் - காத்ததை வகுப்பதிலும் - வல்லமை மிக்கவராய் திகழ்பவர் nullதமிழக முதலமைச்சர்.
 
செலவு அறிந்து வருவாய் ஈட்டும் தனித்திறனும், வரவு அறிந்து செலவிடுகின்ற வரைமுறையும், நன்கறிந்தவர், முதல்வர்! கடந்த இரண்டு ஆண்டுகளில் கடுமையான நிதி நெருக்கடிகளைச் சமாளித்து, எண்ணற்ற திட்டங்களை உருவாக்கித் தந்து, அவற்றை செயல்படுத்தியதுடன், ஈடு இணையற்ற  நிர்வாகத் திறனும், நிதி மேலாண்மைத் திறனும் கொண்டு, இந்த மூன்றாண்டுகளில்,  தொடர்ந்து வருவாய் உபரி உள்ள வரவு செலவுத் திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து,  முதல்வர், ஒரு மாபெரும் சரித்திரச் சாதனையைப் படைத்துள்ளார் என்பதை, மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
 
அழிஞ்ச கொல்லையில, குதிரை மேஞ்சா என்ன? கழுதை மேஞ்சா என்ன? இப்படி ஒரு பழமொழி இருக்கிறது! கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அப்படித்தான் நடந்தது. நிர்வாகத்திறமை அழிந்து போய் நிதி நிலைமை அழிந்து போய் கஜானா காலியாகப் போன தமிழ்நாட்டில் எது நடந்தால் என்ன? -என்ற பொறுப்பற்ற ஆட்சிதான் நடைபெற்றது.  
மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், குதிரையும், கழுதையும் மேய்ந்து அழிந்து போன காடாக  இருந்த தமிழ்நாடு, முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றதும், அழகுச் சோலையாக மாறியிருக்கிறது!  
இவ்வாறு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
 

No comments:

Post a Comment