Pages

Wednesday, May 22, 2013

அமெரிக்காவில் கடும் சூறாவளி 20 குழந்தைகள் உள்பட 91 பேர் பலி!

Wednesday, May 22, 2013
ஹூஸ்டன்::அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் கடும் சூறாவளி காற்று விசியதில் 20 குழந்தைகள் உள்பட 91 பேர் இறந்தனர்
ஒக்லஹாமா மாகாணத்தில் நேற்றுமுன்தினம் கடும் சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 200 மைல் வேகத்தில் (320 கி.மீ.) வீசிய அந்த சூறாவளி புயல் ஒரு மைல் தூரத்திற்கு பரந்து காணப்பட்டது. 40 நிமிடங்களில் 32 கி.மீ. தூரம் பயணித்த இந்த சூறாவளி வழியில் இருந்த கட்டிடங்கள், மரங்கள், மின்சார கோபுரங்கள் என அனைத்தையும் தரைமட்டமாக்கி விட்டது.

மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள மூரே நகரில் சூறாவளி கோர தாண்டவமாடியது. இங்கு இருந்த 2 பள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் அழித்தது. அந்த பள்ளியில் இருந்த குழந்தைகள் காணாமல் போய்விட்டனர். பிளாசா டவர் நடுநிலைப் பள்ளியில் இடி பாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த பல குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஒக்லஹாமா நகர மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ''20 குழந்தைகள் உள்பட 91 பேர் இறந்தனர். 233 பேர் காயமடைந்துள்ளனர். சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.

மாகாண அவசரகால நிர்வாக துறை செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி லோஜ்கா கூறுகையில், ''இன்னும் பல பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வீடாக சென்று யாராவது இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என்று மீட்புக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்'' என்றார். அதிபர் ஒபாமா ஒக்லஹாமா மாகாணத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment