Wednesday, March 20, 2013
புதுடெல்லி::இலங்கை தமிழர் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பிளாக்மெயில் செய்யவே தி.மு.க. முயற்சிக்கிறது என்று சமாஜ்வாடி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இதுவரை பங்கேற்று வந்த தி.மு.க. நேற்று மத்திய அரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஆனால் இதை கபட நாடகம் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள். காங்கிரஸ் அரசை வெளியில் இருந்து ஆதரித்து வரும் சமாஜ்வாடி கட்சியும் தி.மு.க. வை விமர்ச்சித்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசை பிளாக் மெயில் செய்யும் முயற்சிதான் இது என்று சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து இக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கோபால் யாதவ் பாராளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய அவர் ஆதரவை வாபஸ் பெறுவதாக தி.மு.க. முடிவு எடுத்து அறிவித்துள்ளது. ஆனால் யாரும் விலகவில்லை. இது அரசை பிளாக்மெயில் செய்யும் முயற்சி. அரசு ஸ்திரமாகவே உள்ளது என்று கூறினார். தி.மு.க. ஆதரவை வாபஸ் பெறவும் இல்லை. அப்படி செய்யும் எண்ணமும் அதற்கு இல்லை என்று கூறிய அவர் ஜனாதிபதிக்கு எழுத்துமூலமாக இவர்கள் ஏதாவது கொடுத்திருக்கிறார்களா? என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார். 543 உறுப்பினர்களை கொண்ட லோக்சபையில் அரசுக்கு தற்போது 303 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாம். தி.மு.க.வுக்கு லோக்சபையில் 18 உறுப்பினர்களே உள்ளனர். எனவே அரசுக்கு ஆபத்து இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள்.

No comments:
Post a Comment