Pages

Friday, March 8, 2013

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கைவிரிப்பு: பார்லிமென்டில் தி.மு.க/புலிகளின் ஆதரவாளர்கள் ஏமாற்றம்!

Friday, March 08, 2013
புதுடில்லி::இலங்கைக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கமிஷனில், அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்' என்ற, தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்க, மத்திய அரசு மறுத்து விட்டது. தீர்மானம் தொடர்பாக, உறுதியான நிலையை அறிவிக்காமல், கைவிரித்து விட்டது. இதனால், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தி.மு.க., - எம்.பி.,க்களும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் நேற்று லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கண்டனம்: கடந்த, 2009ல் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது,  தமிழர்கள், ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். போர் நெறிமுறைகளை மீறிய,  ராணுவத்தின் இந்த அத்துமீறல்களுக்கு, உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. அதனால், போர்க் குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கைக்கு எதிராக, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில், தற்போது நடைபெற்று வரும், ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் கூட்டத்தில், அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளது.

இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க, உலக நாடுகள் பல முன்வந்துள்ளன. அதனால், இந்திய அரசும் ஆதரிக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வும், மத்திய கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, தி.மு.க.,வும் கோரி வருகின்றன. ஆனால், மத்திய அரசோ, இந்த விவகாரத்தில், எந்த முடிவும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம், இந்த விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் பேசிய, பிரதமர் மன்மோகன் சிங், "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து, உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்' என்றார். இந்நிலையில், இலங்கை பிரச்னை தொடர்பாக, நேற்று லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தை துவக்கி வைத்து, தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு பேசியதாவது: இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனில், அமெரிக்கா தாக்கல் செய்யும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்பேற்கச் செய்ய, அந்த 0தீர்மானம் நிறைவேற்றப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

போர்க்குற்றம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், சர்வதேச கோர்ட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டால், அது போர்க்குற்றங்களால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமையும். இந்த விஷயத்தில், மத்திய அரசு தெளிவான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தீர்மானம் தொடர்பாக, தெளிவான நிலையை, மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். போஸ்னியா, சிரியா உட்பட, சில நாடுகளில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்கள், சர்வதேச கோர்ட்டால், குற்றவாளி என, அறிவிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டனர். அதேபோல், இலங்கையில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், ""இலங்கை தமிழர் விவகாரத்தில், நமது வெளிநாட்டு கொள்கை என்ன என்பதை, மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு உதவ, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி, பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் விவரிக்க வேண்டும்,'' என்றார்.

மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் பேசுகையில், ""இலங்கை தமிழர் பிரச்னையில், காங்கிரசுடன், தி.மு.க.,வுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், உடனடியாக, மத்திய அரசிலிருந்து, தி.மு.க., வெளியேற வேண்டும்,'' என்றார்.பா.ஜ., - எம்.பி., யஷ்வந்த் சின்கா பேசியதாவது: இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்தியா ஓட்டளித்தால் மட்டும் போதாது; அந்த

தீர்மானத்தை தயார் செய்வதிலும், அதை நிறைவேற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இலங்கையில், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு யஷ்வந்த்சின்கா பேசினார்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பித்துரை பேசுகையில்,,"" இலங்கை ராணுவ

வீரர்களுக்கு, இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது,'' என்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி., அழகிரி பேசுகையில்,"" ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையை நட்பு நாடு என கூறக் கூடாது,'' என்றார். இந்த விவாதங்களுக்கு பதில் அளித்த, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ""எம்.பி.,க்களின் உணர்வுகள், கவனத்தில் கொள்ளப்படும். ஐ.நா.,வில் தாக்கலாக உள்ள, தீர்மானம் தொடர்பாக, இலங்கையுடனும், மற்ற நாடுகளுடனும், ஆலோசனை நடத்தப்படும். அதன் பின், பொருத்தமான முடிவை இந்தியா எடுக்கும்,'' என்றார். அமைச்சரின் பதிலை ஏற்க முடியாது எனக்கூறி, தி.மு.க., - அ.தி.மு.க., - எம்.பி.,க்களும், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.,க்களும் வெளிநடப்பு செய்தனர். சமாஜ்வாதி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்ய முயன்றதை பார்த்த, பிரதமர் அலுவலக இணை அமைச்சர், நாராயணசாமி, அவர்களிடம் பேசி சமாதானம் செய்தார்.

No comments:

Post a Comment