Tuesday, March 05, 2013
புதுடெல்லி::இலங்கைக்கு எதிராக, இந்திய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக கட்சிகள் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்று, அ.இ.அ.தி.மு.க. எம்.பி-க்கள், இலங்கை பிரச்சினைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பாராளுமன்ற மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.
பாராளுமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்திருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய அங்கமாக உள்ள தி.மு.க. எம்.பி.க்களும், இலங்கைக்கு எதிராக எதிர்ப்பு குரல் கொடுத்தனர். ஆனால், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதத்தில் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தாலும் அவர் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தாத, பாராளுமன்ற விதி 193-ன் படி, வரும் வியாழன் அன்று, இலங்கை பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் சிறிது நேரம் விவாதிக்க சபாநாயகர் மீரா குமார் அனுமதிக்கலாம் என்று தெரிகிறது.
முன்னதாக இன்று பாராளுமன்றத்தின் வெளியே, திமுக எம்பிக்கள் இலங்கை தமிழர்களை காப்பாற்ற வலியுறுத்தி அறிவிப்பு தட்டிகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தமிழர் பிரச்சினை: பாராளுமன்றத்தில் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு!:-
பாராளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினையை கிளப்பினார்கள். அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து இலங்கை தமிழர் விவகாரம் குறித்த பிரச்சினையை கிளப்பினார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் போலீஸ் துணை சூப்பிரண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினையை கிளப்பினார்கள். பஞ்சாப்பை சேர்ந்த சில காங்கிரஸ் உறுப்பினர்கள் இளம் பெண்ணை போலீசார் தாக்கியது தொடர்பான பிரச்சினையை கிளப்பினர். இதே போல இடதுசாரி உறுப்பினர்களும் சபையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.
ஒரே அமளி நிலவியதால் சபாநாயகர் சபையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார். சபை மீண்டும் கூடியதும் சமாஜ்வாடி உறுப்பினர்கள் போலீஸ் அதிகாரி கொலை தொடர்பாகவும், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாகவும் பிரச்சினை கிளப்பினார்கள். இதனால் சபை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லி மேல்-சபையிலும் ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு பிரச்சினையை கிளப்பினார்கள். அ.தி.மு.க. உறுப்பினர்கள் இலங்கை தமிழர் பிரச்சினையை கிளப்பினார்கள். உத்தரபிரதேச அரசை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.
இதனால் சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் சபை மீண்டும் கூடியது. சபை கூடியதும் மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பப்பட்டது.

No comments:
Post a Comment