Thursday, March 07, 2013
புதுடெல்லி::இலங்கை தமிழர் (புலிகள் சார்பு) பிரச்னை குறித்து மக்களவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. திமுக எம்பி டி.ஆர்.பாலு விவாதத்தை தொடங்கிவைத்து பேசினார். ‘இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் நிலை என்ன?’ என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என அவர் அப்போது கேட்டுக் கொண்டார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற கடைசி கட்ட போரின் போது பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவுள்ளது. இதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்களவையில் ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து நேற்று உறுப்பினர்கள் பேசினர். அப்போது திமுக எம்பி இளங்கோவன், இலங்கை பிரச்னை பற்றி பேசினார்.
இது தொடர்பாக இன்று விரிவான விவாதம் நடத்தப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் உறுதி அளித்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதித்துறை தொடர்பான கேள்விகளுக்கு மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் பதில் அளித்தார். இதை தொடர்ந்து பகல் 12.07 மணிக்கு இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பான விவாதம் தொடங்கியது. திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் ஆகியோர் இருந்தனர். டி.ஆர்.பாலு பேசியதை சோனியா உன்னிப்பாக கவனித்தார். சல்மான் குர்ஷித் குறிப்புகள் எடுத்துக் கொண்டார். டி.ஆர்.பாலு பேசியதாவது: இலங்கை தமிழர் பிரச்னையை தீர்ப்பதற்காக சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்பட்டது. இதன் தீர்மானங்கள் ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் தூதர்களிடமும் டெசோ தீர்மானங்கள் கொடுக்கப்பட்டது. இந்த பிரச்னையில் இந்திய அரசின் நிலை என்ன என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் நடந்து வருகின்றன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கடைசி கட்ட போரின் போது 40 ஆயிரம் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது. பல ஆயிரம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 19 ஆயிரம் பெண்கள் விதவைகளாகியுள்ளனர். 2 லட்சம் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். இலங்கையில் நடைபெற்றது தமிழ் இன அழிப்பு நடவடிக்கை. தமிழர்கள் வசித்து வந்த 90 கிராமங்கள் சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. தமிழ் பண்பாடு, கலாசாரம் அழிக்கப்பட்டு வருகிறது.
நமது புனித தலங்களுக்கு போர்க் குற்றவாளிகள் வருவதற்கு இந்தியா அனுமதிப்பது ஏன்? திருப்பதி செல்ல போர்க் குற்றவாளி ஏன் அனுமதிக்கப்பட்டார்? அவர் கையில் படிந்த ரத்தத்தை கழுவுவதற்காக வருகிறார். தமிழ் மக்களின் ரத்தம் மட்டுமல்லாது பாலசந்திரன் என்ற குழந்தையின் ரத்தமும் அவர் கைகளில் படிந்திருக்கிறது. தமிழ் ஈழத்துக்காக இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து திமுக போராடும். இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார். இதை தொடர்ந்து பாஜவை சேர்ந்த யஷ்வந்த்சின்கா பேசினார். கனத்த இதயத்துடன் விவாதத்தில் பங்கேற்பதாக அவர் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை பிரச்னையை கையாள்வது எளிதான விஷயம். பதுங்கு குழியில் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் பாலசந்திரன் சில நிமிடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். இலங்கையில் நடந்தது நமது காலத்தில் நடைபெற்ற மிக கொடுமையான துயரம். போர் நடந்த போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தற்போதும் தொடர்கிறது. மாறியுள்ள சூழலில் இலங்கை தொடர்பான இந்திய கொள்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு யஷ்வந்த் சின்கா பேசினார்.

No comments:
Post a Comment